ADDED : ஜன 31, 2025 12:15 AM
நந்தம்பாக்கம், ஆவடியில் உள்ள நசரத் மெட்ரிகுலேஷன் பள்ளியில் படிக்கும் 140 பேர், ஆசிரியை ஜான்சி சூர்யா தலைமையில் கல்வி சுற்றுலாவாக கிண்டியில் உள்ள பிர்லா கோளரங்கத்திற்கு, மூன்று பள்ளி வேனில் ஆவடியில் இருந்து புறப்பட்டனர்.
மவுன்ட்- - பூந்தமல்லி சாலையில் வேன் சென்றபோது, நந்தம்பாக்கம், வர்த்தக மையம் எதிரே ஒரு ஆட்டோ மீது கார் ஒன்று மோதியது. இதனால், திடீரென 'பிரேக்' போடப்பட்டதால், பின்னால் வந்த பள்ளி வேன்கள் அடுத்தடுத்து நிறுத்தப்பட்டன.
அப்போது, திருவள்ளூரில் இருந்து தி.நகர் நோக்கி வந்த மாநகர பேருந்து, கட்டுப்பாட்டை இழந்து கடைசியாக வந்த பள்ளி வேன் மீது மோதியது.
இதில் வேனின் பின்புற கண்ணாடி உடைந்தது. அந்த வேனில் 39 மாணவ - மாணவியர் இருந்தனர்.அவர்களில் பின்புறம் அமர்ந்திருந்த 12 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது.
போக்குவரத்து போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து மாணவ - மாணவியரை மீட்டு, அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்து முதலுதவி அளித்தனர்.
இந்த சம்பவம் குறித்து பரங்கிமலை போக்குவரத்து போலீசார் வழக்கு பதிந்து, மாநகரபேருந்து ஓட்டுநர் கோபாலகிருஷ்ணனிடம் விசாரிக்கின்றனர்.

