/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
'பார்க்கிங்'காக மாறிய சாலை பஸ் ஓட்டுநர்கள் கடும் அவதி
/
'பார்க்கிங்'காக மாறிய சாலை பஸ் ஓட்டுநர்கள் கடும் அவதி
'பார்க்கிங்'காக மாறிய சாலை பஸ் ஓட்டுநர்கள் கடும் அவதி
'பார்க்கிங்'காக மாறிய சாலை பஸ் ஓட்டுநர்கள் கடும் அவதி
ADDED : செப் 29, 2025 02:28 AM

திருவொற்றியூர்: தனியார் மருத்துவ மனைக்கு போதிய 'பார்க்கிங்' வசதியில்லாததால், கண்டமேனிக்கு சாலையில் நிறுத்தப்படும் வாகனங்களால், பேருந்து ஓட்டுநர்கள் உட்பட கனரக வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகின்றனர்.
திருவொற்றியூர் - எல்லையம்மன் கோவில் சந்திப்பு, தெற்கு மாடவீதி, திருவொற்றியூர் நெடுஞ்சாலை, எண்ணுார் விரைவு சாலை ஆகியவற்றை இணைக்கும் நான்குமுனை சந்திப்பாக எல்லையம்மன் கோவில் தெரு உள்ளது.
சுற்றிலும், பள்ளிக் கல்லுாரி, மருத்துவமனை, வணிக வளாகங்கள், ஜவுளி கடைகள் உள்ளிட்டவை செயல்படுவதால், மக்கள் நடமாட்டம் மற்றும் வாகன போக்குவரத்து மிகுதியாக இருக்கும்.
இதில், மணலியில் இருந்து, மாட்டுமந்தை மேம்பாலம், தெற்கு மாடவீதி வழியாக வரும், மாநகர பேருந்துகள், எல்லையம்மன் கோவில் சந்திப்பு அருகே திரும்ப வேண்டும்.
அந்த பகுதியில் எஸ்.எஸ்.எஸ்., மருத்துவமனைக்கு போதிய 'பார்க்கிங்' வசதி இல்லை.
இதனால், மருத்துவமனைக்கு வருபவர்கள், தங்களது ஸ்கூட்டர், பைக் உள்ளிட்ட வாகனங்களை, சாலையோரமே மானாவரியாக நிறுத்தி செல்கின்றனர். இதனால், அந்த சந்திப்பில், மாநகர பேருந்துகள் திரும்ப முடிவதில்லை.
இதை, மருத்துவமனை நிர்வாகமும் கண்டுக்கொள்வதில்லை. போக்குவரத்து போலீசாரும் நடவடிக்கை எடுத்தாற் போல் தெரியவில்லை. இதன் காரணமாக, மாநகர பேருந்துகள் திரும்பும்போது, குறைந்தது, 10 நிமிடங்களாவது அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனித்து, இப்பிரச்னைக்கு உரிய தீர்வு காண வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.