/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தமிழில் பெயர் பலகை வைக்க வணிகர்களுக்கு கண்டிப்பு
/
தமிழில் பெயர் பலகை வைக்க வணிகர்களுக்கு கண்டிப்பு
ADDED : மார் 02, 2024 12:03 AM

மயிலாப்பூர், மார்ச் 2--
தமிழ் வளர்ச்சித்துறை, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மற்றும் மந்தைவெளி அனைத்து வியாபாரிகள் சங்கம் இணைந்து, மயிலாப்பூர் லஸ் கார்னர் பகுதியில், தமிழில் பெயர் பலகை மாற்றம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடத்தின.
முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாளை ஒட்டி, நடந்த இந்நிகழ்ச்சிக்கு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் விக்கிரமராஜா தலைமை தாங்கினார்.
சிறப்பு விருந்தினர்களாக தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் மற்றும் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் கணேசன் ஆகியோர் பங்கேற்றனர்.
அமைச்சர் கணேசன் பேசியதாவது:
டில்லி, மஹாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில், ஹிந்தி மொழிக்கு மட்டும் தான் முக்கியத்துவம் இருக்கும். ஹோட்டல், வணிக நிறுவனங்களில் ஹிந்தி பெயர்பலகைகளாக இருக்கின்றன. ஆனால் தமிழகத்தில் அப்படி இல்லை. எனவே, பெயர் பலகைகள் தமிழில் மாற்றி அமைக்கப்பட உள்ளன.
இவ்வாறு அவர் பேசினார்.
அமைச்சர் சாமிநாதன் பேசியதாவது:
வணிக நிறுவனங்களில், தமிழ் பெயர் பலகை வைப்பதற்கு, வரும் ஏப்ரல் மாதம் வரை நேரம் கேட்டுள்ளனர். மே மாதத்தில், அனைத்து கடைகளிலும், கண்டிப்பாக தமிழில் பெயர் பலகை வைக்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சி முடிவில், அமைச்சர்கள் உள்ளிட்டோர் பேரணியாக சென்று, அங்குள்ள ஒரு கடையின் பெயர்பலகையை தமிழில் மாற்றி அமைத்தனர்.

