/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஏர்போர்ட்டில் தியேட்டர் இருக்கலாமா? ஆணையம் பதிலளிக்க உத்தரவு
/
ஏர்போர்ட்டில் தியேட்டர் இருக்கலாமா? ஆணையம் பதிலளிக்க உத்தரவு
ஏர்போர்ட்டில் தியேட்டர் இருக்கலாமா? ஆணையம் பதிலளிக்க உத்தரவு
ஏர்போர்ட்டில் தியேட்டர் இருக்கலாமா? ஆணையம் பதிலளிக்க உத்தரவு
ADDED : ஜூன் 26, 2025 11:53 PM
சென்னை, சென்னை விமான நிலையத்தில் உள்ள திரையரங்கு செயல்பட அனுமதி மறுத்ததை எதிர்த்த மனுவுக்கு பதிலளிக்கும்படி, இந்திய விமான நிலையங்கள் ஆணையத்துக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை விமான நிலையத்தில் உள்ள கார்கள் நிறுத்தத்தை மேம்படுத்துவது தொடர்பாக, மீனம்பாக்கம் ரியாலிட்டி நிறுவனத்துடன், இந்திய விமான நிலையங்கள் ஆணையம், 2018ல் ஒப்பந்தம் செய்தது.
கார்கள் நிறுத்தும் இடத்தில், திரையரங்கு அமைக்கவும் முடிவு செய்யப்பட்டு, பி.வி.ஆர்., ஐனாக்ஸ் மல்டிபிளக்ஸ் நிறுவனத்துடன், துணை ஒப்பந்தமும் செய்யப்பட்டது.
திரையரங்கு அமைவதை குறிப்பிட்டு, கார்கள் நிறுத்த மேம்பாட்டு பணிகளுக்கு, மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் ஒப்புதல், சென்னை போலீஸ் கமிஷனரின் தடையில்லா சான்று பெற்று, கட்டுமானங்கள் முடிக்கப்பட்டன. இந்த திரையரங்கம், 2023 பிப்., மாதம் செயல்பாட்டுக்கு வந்தது.
இந்நிலையில், இந்திய விமான நிலையங்கள் ஆணைய சட்டப்படி, விமான நிலைய வளாகத்தில் திரையரங்கிற்கு அனுமதியில்லை எனக்கூறி, திரையரங்கு செயல்பட அனுமதி மறுத்து, இந்திய விமான நிலையங்கள் ஆணையம், ஜூன் 20ம் தேதி உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து பி.வி.ஆர்., ஐனாக்ஸ் தாக்கல் செய்த வழக்கு, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது, விமான நிலைய கார் நிறுத்தும் பகுதியில் உணவகங்கள், கடைகள் செயல்பட்டு வரும் நிலையில் திரையரங்கிற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. 20 கோடி ரூபாயை திரையரங்கிற்காக முதலீடு செய்யப்பட்டுள்ளது என, பி.வி.ஆர்.,நிறுவன தரப்பில் வாதிடப்பட்டது.
இதையடுத்து, இந்திய விமான நிலையங்கள் ஆணையம் ஜூலை 8ம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும். அதுவரை தற்போதைய நிலையே நீடிக்க வேண்டும் என, நீதிபதி உத்தரவிட்டார்.