ADDED : ஆக 29, 2025 10:26 PM
சென்னை, ''முன்னெச்சரிக்கை பணிகளால், 20 செ.மீ., மழை பெய்தால்கூட சென்னை தாக்குப்பிடிக்கும்,'' என மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
சென்னை மாநகராட்சி சார்பில், கிண்டி ரேஸ்கோர்ஸ் மைதானத்தில், நான்கு குளங்கள் வெட்டப்பட்டுள்ளன. இதன் கொள்ளளவை இருமடங்காக அதிகரிக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை, அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று பார்வையிட்டார்.
அப்போது, நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
கிண்டி ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் 4.77 மில்லியன் கன லிட்டர் மழைநீர் தேக்கக்கூடிய வகையில் 27,647 ச.மீ., பரப்பளவில் நான்கு குளங்கள் வெட்டப்பட்டுள்ளன.
இதை 49,772 ச.மீ., பரப்பளவில் விரிவாக்கம் பணி நடந்து வருகிறது. இதன் மூலம், 8.66 மில்லியன் கன லிட்டர் மழைநீரை தேக்க முடியும். இது தவிர, மழைநீர் வடிகால்வாய்கள் துார்வாரப்பட்டுள்ளன. எனவே, வடகிழக்கு பருவமழை 20 செ.மீ., பெய்தால்கூட, சென்னை தாக்குப்பிடிக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.