/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சென்னை கலெக்டரின் வங்கி கணக்கில்... துணிகர மோசடி! ரூ.12 லட்சம் சுருட்டிய அதிகாரிகள் கைது
/
சென்னை கலெக்டரின் வங்கி கணக்கில்... துணிகர மோசடி! ரூ.12 லட்சம் சுருட்டிய அதிகாரிகள் கைது
சென்னை கலெக்டரின் வங்கி கணக்கில்... துணிகர மோசடி! ரூ.12 லட்சம் சுருட்டிய அதிகாரிகள் கைது
சென்னை கலெக்டரின் வங்கி கணக்கில்... துணிகர மோசடி! ரூ.12 லட்சம் சுருட்டிய அதிகாரிகள் கைது
ADDED : ஏப் 04, 2025 11:54 PM

அரசின் சார்பில் துவங்கப்பட்ட சென்னை கலெக்டரின் வங்கி கணக்கில் இருந்து, அவரை போல காசோலையில் போலியாக கையெழுத்திட்டு, 11.63 லட்சம் ரூபாய் கையாடல் செய்த, இரு வருவாய் ஆய்வாளர்கள் மற்றும் கார் டிரைவர் கைது செய்யப்பட்டனர்.
சென்னை பாரிமுனை, ராஜாஜி சாலையில் சென்னை கலெக்டர் அலுவலகம் செயல்படுகிறது. வெளிநாடுகளில் பணிபுரியும் இந்தியர்கள், அங்கு பணியின் போது உயிரிழந்தால், அவர்களின் குடும்பத்தினருக்கு உதவும் வகையில், அந்தந்த மாவட்ட கலெக்டர்களுக்கு, அரசின் சார்பில் என்.ஆர்.ஐ., நிதியுதவி என்ற வங்கி கணக்கு துவக்கப்பட்டுள்ளது.
இதில், அரசின் சார்பில் சேர்க்கப்படும் நிதியில் இருந்து, உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு நிதியுதவி வழங்கப்படுகிறது.
அந்த வகையில், சென்னை பாரிமுனை, ராஜாஜி சாலையில் உள்ள கலெக்டர் அலுவலகம் சார்பில், சென்னை கலெக்டர் பெயரில், என்.ஆர்.ஐ., நிதியுதவி வங்கி கணக்கு துவக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது.
போலி கையெழுத்து
இந்த வங்கி கணக்கில் இருந்து, பல தவணைகளில், 11.63 லட்சம் ரூபாய் எடுக்கப்பட்டு உள்ளது. இந்த தொகை, 2022 - 2023ல் தினேஷ் என்ற பயனாளிக்கு வழங்கப்பட்டது போல, ஆவணத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
ஆனால், அதில் கலெக்டரின் கையெழுத்து இல்லை. இதனால், கலெக்டர் அலுவலக அதிகாரிகளுக்கு குழப்பம் ஏற்பட்டது.
வங்கி அதிகாரிகளிடம் கேட்ட போது, 'கலெக்டர் தான் காசோலையில் கையெழுத்திட்டு, பணத்தை எடுத்துள்ளார்' என, தெரிவித்தனர்.
இது, கலெக்டரையும் குழப்பமடைய வைத்தது. பணம் மாயமானது தொடர்பான விசாரணையில் அதிகாரிகள் ஈடுபட்டனர். கலெக்டர் அலுவலக என்.ஆர்.ஐ., பிரிவு அதிகாரிகள், தங்களுக்கு எதுவுமே தெரியாதது போல அமைதி காத்தனர்.
துணை கலெக்டர் ஹர்ஷத் பேகம், சென்னை வடக்கு கடற்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது குறித்து, உதவி கமிஷனர் ராஜசேகரன் விசாரணை நடத்தினார்.
கலெக்டர் அலுவலக ஊழியர்கள் மற்றும் வங்கி அதிகாரிகளிடம், முதற்கட்ட விசாரணை நடத்தப்பட்டது. மோசடிக்கு வங்கி அதிகாரிகளும் உடந்தையாக இருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்பட்டது.
இன்ஸ்பெக்டர் அருணாச்சலம் ராஜா தலைமையிலான போலீசார், சந்தேகத்தின் அடிப்படையில், சென்னை கலெக்டர் அலுவலகத்தில் தற்போது ஆர்.ஐ., எனப்படும் வருவாய் ஆய்வாளராக பணிபுரியும் பிரமோத், 30, என்பவரை பிடித்து விசாரித்தனர்.
அரசு முத்திரை
அவர் அளித்த தகவலின்படி, ஏற்கனவே சென்னை கலெக்டர் அலுவலகத்தில் என்.ஆர்.ஐ., பிரிவில் பணிபுரிந்து, தற்போது மாம்பலம் தாசில்தார் அலுவலகத்தில், ஆர்.ஐ.,யாக பணிபுரியும் சுப்பிரமணி, 31, என்பவரை பிடித்து விசாரித்தனர்.
அப்போது, இருவரும் சேர்ந்து, பிரமோத்தின் நண்பரான திருவள்ளூர் பாக்கம், பஜனை கோவில் தெருவைச் சேர்ந்த, கார் டிரைவர் தினேஷ், 30, என்பவரை பயனாளியாக காட்டி, பணம் எடுத்ததை ஒப்புக் கொண்டனர்.
இதற்காக, கலெக்டரின் பெயரில் போலி முத்திரைகள் தயாரித்தும், காசோலையில் அவரை போல கையெழுத்திட்டும் மோசடி செய்ததாக வாக்குமூலம் அளித்தனர்.
இதையடுத்து, பிரமோத், சுப்பிரமணி, தினேஷ் ஆகிய மூன்று பேரையும் போலீசார் நேற்று கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
இவர்களிடம் இருந்து, மோசடி பணத்தில் வாங்கப்பட்ட, மூன்று லட்சம் ரூபாய் மதிப்பிலான இருசக்கர வாகனங்கள், 1 சவரன் தங்க நகை, 80,000 ரூபாய் மற்றும் போலி ஆவணங்கள் தயாரிப்பதற்கு பயன்படுத்தப்பட்ட அரசு முத்திரை உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.
- நமது நிருபர் -

