/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
செயின் பறிப்பில் சிக்கும் "டீன்-ஏஜ்' சிறார்கள் : குற்றங்களை குறைக்க நடவடிக்கை
/
செயின் பறிப்பில் சிக்கும் "டீன்-ஏஜ்' சிறார்கள் : குற்றங்களை குறைக்க நடவடிக்கை
செயின் பறிப்பில் சிக்கும் "டீன்-ஏஜ்' சிறார்கள் : குற்றங்களை குறைக்க நடவடிக்கை
செயின் பறிப்பில் சிக்கும் "டீன்-ஏஜ்' சிறார்கள் : குற்றங்களை குறைக்க நடவடிக்கை
ADDED : ஆக 01, 2011 01:41 AM
சென்னை : செயின் பறிப்பு திருடர்களை பிடிக்க, சென்னை போலீசார் நடத்திய வேட்டையில், 18 வயதுக்குட்பட்டவர்கள், அதிகளவில் சிக்கியுள்ளது, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.தங்கத்தின் விலை அதிகரிப்பு, வெளிமாநில பைனான்ஸ் நிறுவனங்களின் உடனடி கோல்டு லோன் மற்றும் அன்றைய மார்க்கெட் விலையை கடனாக வழங்கும் அறிவிப்பு போன்றவை, தங்கத்தின் மீதான திருடர்களின் கண்களை விரிய வைத்து விட்டன.
சென்னையில், கடந்த, எட்டு மாதங்களாக செயின் பறிப்பு சம்பவங்கள் அதிகரித்தன.
டூவீலர்களில் ஹெல்மெட் அணிந்து, இருவராக வந்து செயினை பறித்துச் செல்லுதல், முகவரி கேட்பது போல் நடித்து, செயினை பறித்தல், அதிகளவில் நகைகளை அணிந்து செல்லும் பெண்களை பின் தொடர்ந்து, நடந்து சென்றே செயின் பறித்தல் போன்ற சம்பவங்கள் அதிகளவில் நடந்தன.கடந்த ஜனவரி மற்றும் பிப்ரவரியில், சென்னையில் நடந்த செயின் பறிப்பு சம்பவங்களில், 10க்கும் மேற்பட்டவர்களை கைது செய்த போது, அவர்கள் பெரும்பாலும் கல்லூரி மாணவர்கள் என்பது தெரிந்தது. வெளியூர்களில் இருந்து, சென்னையில் வந்து தங்கி, பொறியியல் கல்லூரிகளில் படிக்கும் சில மாணவர்கள், தங்கள் பணத் தேவைக்காக இது போன்ற சம்பவங்களில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
கீழ்ப்பாக்கம் பகுதியில் நடந்த செயின் பறிப்பு சம்பவத்தில், பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் சிக்கியது இதில், 'ஹைலைட்'டாக இருந்தது. சமீபகாலமாக கைது செய்யப்பட்டவர்களில், 18 வயதுக்குட்பட்டவர்கள் அதிகளவில் பிடிபட்டு வருவது, போலீசார் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.சமீபத்தில் வடசென்னையில், வேப்பேரி, கீழ்ப்பாக்கம், பெரம்பூர் பகுதிகளில் நடந்த செயின்பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்ட, 14 பேரை போலீசார் பிடித்தனர். அவர்களில், 12 பேர், 18 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. பிடிபட்ட மேலும் இருவர், 23, 28 வயதுடையவர்கள்.இவர்களைத் தவிர, தென்சென்னையின் சில இடங்கள், மத்திய சென்னையில் குறிப்பிட்ட சில பகுதிகளில் பிடிபட்டவர்களில் ஒரு சிலரும் என, 20க்கும் மேற்பட்ட சிறுவர்கள், செயின் பறிப்பில் சிக்கி, சிறுவர் இல்லத்தில் அடைக்கப்பட்டுள்ளனர்.
வடசென்னை பகுதியில் பிடிபட்ட சிறுவர்கள் அனைவரும், குழுவாக சேர்ந்து, இச்சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள், இரண்டு மூன்று பிரிவாக டூவீலர் மற்றும் நடந்து செல்வர்.வாகனத்தில் குறிப்பிட்ட சில பகுதிகளுக்கு செல்லும் ஒரு குழுவினர், முதலில், அப்பகுதியில் நோட்டமிடுவர். தனியாக பெண்கள் வரும் நேரங்களை தேர்வு செய்வர். இந்த தகவலை மற்றொரு குழுவிற்கு சொல்லிவிட்டு, தொடர்ந்து மற்ற பகுதிகளை நோட்டமிட அவர்கள் சென்றுவிடுவர். தகவலை பெற்றுக் கொண்ட அந்த குழுவினர், நடந்து செல்வதா அல்லது வாகனத்தில் செல்வதா என்பதை முடிவு செய்து, 'ஆபரேஷனில்' இறங்குவர்.ஒரு வேளை செயினை பறித்துக் கொண்டு தப்பும் போது, யாராவது பிடிக்க வந்தால், அதே பகுதியில் தயாராக நிற்கும் மற்றொரு குழுவினர், இடையில் புகுந்து சிறு விபத்தை ஏற்படுத்தி, அனைவரும் தப்பிவிடுவர்.
இது அந்த கும்பலின் வாடிக்கை.பெரும்பாலும், இதே முறையை தான், அனைத்து செயின் பறிப்பு கும்பலை சேர்ந்தவர்களும் கடைபிடிப்பதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.மேலும், இதில் பிடிபடும் சிறுவர்கள் யாரும் இதற்கு முன், குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டு பிடிபடவில்லை; முதல் முறையாக பிடிபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.தொடர்ந்து, செயின் பறிப்பு திருடர்கள் பிடிபட்டாலும், அங்கொன்றும் இங்கொன்றுமாக சம்பவங்கள் நடந்து கொண்டிருப்பதால், தற்போது சென்னை மாநகர கமிஷனர், 'பீட் அபீஷியல்ஸ்' திட்டத்தை செயல்படுத்தி குற்றங்களை குறைக்க நடவடிக்கை எடுத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
நமது சிறப்பு நிருபர்