/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பல்லாவரம் - துரைப்பாக்கம் ரேடியல் சாலை படுமோசம்
/
பல்லாவரம் - துரைப்பாக்கம் ரேடியல் சாலை படுமோசம்
ADDED : ஆக 26, 2011 01:35 AM
துரைப்பாக்கம் : சென்னை புறநகரின் பிரதான சாலையாக விளங்கும் பல்லாவரம் - துரைப்பாக்கம் ரேடியல் சாலை போக்குவரத்திற்கு பயன்படுத்த முடியாதவாறு, குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது.
தரைமட்ட அளவிலேயே மீடியன் உயரம் இருப்பதால், விபத்துகள் அதிகரித்து வருகின்றன. சென்னை புறநகரில், போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் கடந்த 2001-02 ம் ஆண்டு பல்லாவரத்தில் இருந்து துரைப்பாக்கம் வரை, 9.6 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரேடியல் சாலை (இரு பிரதான சாலைகளை இணைக்கும் ஆரச்சாலை) அமைக்கப்பட்டது. ராஜிவ்காந்திசாலையில் உள்ள, ஐ.டி.,நிறுவனங்களில் வேலை பார்க்கும் ஆயிரக்கணக்கானோர் இந்த சாலையை பயன்படுத்துகின்றனர். அதேபோல, ஈ.சி.ஆர்., மற்றும் ராஜிவ்காந்திசாலையில் வசிப்பவர்கள் சென்னை விமான நிலையம் செல்ல, ரேடியல் சாலையையே அதிகம் பயன்படுத்துகின்றனர். அதிகளவிலான பஸ்களும் இயக்கப்படுகின்றன.
மிரட்டும் கால்நடைகள்: நான்காண்டுகளுக்கு முன், பல கோடி ரூபாய் செலவில் புனரமைக்கப்பட்ட இந்த சாலையை, முழுமையான போக்குவரத்திற்கு திறந்து சில மாதங்களே ஆகிய நிலையில், அதன் உண்மை நிலை தற்போது, வெளிச்சத்திற்கு வந்துள்ளது. தற்போது, குண்டும் குழியுமாக மாறியுள்ள இந்த சாலையில், மீடியன் உயரமும் மிகவும் குறைவாக உள்ளது. சாலையில் வலம் வரும் கால்நடைகள், திடீரென மீடியனை கடந்து வந்து வாகன ஓட்டிகளை மிரளச் செய்து வருகின்றன.
மின்விளக்கு இல்லை: பல்லாவரம் ரயில்வே மேம்பாலம் திறந்தபோது, அவசர கோலத்தில் மின்விளக்குகள் பொருத்தப்பட்டன. அதுவும் கீழ்கட்டளை வரை மட்டுமே பொருத்தப்பட்டது. அந்த விளக்குகள் சரிவர எரிவதில்லை. கீழ்கட்டளையில் இருந்து, துரைப்பாக்கம் வரை விளக்கு வசதி செய்து தரப்படாததால், இரவு நேரத்தில் விபத்துகள் அதிகரித்து வருகின்றன.சாலையின் இருபுறமும் குப்பை கொட்டப்படுவதால் துர்நாற்றம் வீசுகிறது. ரேடியல் சாலையில் கீழ்கட்டளை, சுண்ணாம்பு கொளத்தூர் மற்றும் துரைப்பாக்கம் ஆகிய பகுதிகளில், வாகன பழுதுபார்ப்பு நிலையங்கள் உள்ளன. அங்கு வரும் வாகனங்கள் அனைத்தும் சாலையிலேயே நிறுத்தி போக்குவரத்துக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது. குறிப்பாக, துரைப்பாக்கத்தில் ராஜிவ்காந்தி சாலையில் இருந்து, டோல்கேட்வரை தனியார் நிறுவனங்களின் பஸ்கள், லாரிகள் சாலையை அடைத்துக் கொண்டு நிறுத்தப்படுகின்றன.
இப்படி பல்வேறு பிரச்னைகளில் ரேடியல் சாலை சிக்கி தவிக்கிறது. எனவே, இச்சாலையில் போக்குவரத்து வாகனங்களின் எண்ணிக்கையை மனதில் கொண்டு, போர்க்கால அடிப்படையில் சீரமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.
நெடுஞ்சாலைத்துறை விளக்கம்: ரேடியல் சாலை பராமரிப்பு குறித்து பேசிய நெடுஞ்சாலைத்துறை உயர் அதிகாரி ஒருவர், ''ஒருங்கிணைந்த சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ், 10 கிலோமீட்டர் தூரத்திற்கு இந்த சாலை புதுப்பிக்கப்படவுள்ளது. மேலும், அதன் மீடியன் ஒரு மீட்டருக்கு உயர்த்தப்படவுள்ளது. கீழ்கட்டளையில் இருந்து துரைப்பாக்கம் வரை 60 லட்சம் ரூபாய் செலவில் விளக்குகள் பொருத்தப்படவுள்ளன. பதினைந்து கோடி ரூபாய் மதிப்பிலான இத்திட்டத்திற்கு, அரசாணை கிடைத்தவுடன் பணிகள் துவங்கும்,'' என்றார்.