/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
"தலை' இல்லாத தலைநகர கலெக்டர் அலுவலகம்
/
"தலை' இல்லாத தலைநகர கலெக்டர் அலுவலகம்
ADDED : செப் 22, 2011 12:24 AM
சென்னை : கலெக்டர் மாற்றப்பட்டு, 108 நாட்கள் ஆகியும், புது கலெக்டர் இதுவரை நியமிக்கப்படவில்லை தமிழக ஆட்சிக் கட்டிலில் யார் அமர்ந்தாலும் சரி, மாவட்டங்களை நிர்வகிக்கும் முதல்வர்களாக செயலாற்றுபவர்கள் மாவட்ட கலெக்டர்கள்தான்.
அவர்களுக்கு சிறப்பு அதிகாரம் உண்டு. இதன் காரணமாக, திறம்பட செயலாற்றும் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள், இந்த பணிகளில் நியமிக்கப்படுவர். அ.தி.மு.க., ஆட்சிப் பொறுப்புக்கு வந்ததும், தமிழகத்தில் பெரும்பாலான கலெக்டர் இடமாற்றம் செய்யப்பட்டு, புதிய கலெக்டர்கள் நியமிக்கப்பட்டனர். தலைநகர் சென்னையில், கலெக்டராக பணியாற்றிய ÷ஷாபனா, கரூர் கலெக்டராக மாற்றப்பட்டார். இவர் கடந்த ஜூன் 6ம் தேதி, சென்னையிலிருந்து மாற்றலாகிக் சென்றார். அதன்பின் புதிய கலெக்டர் நியமிக்கப்படவில்லை. மாவட்ட வருவாய் அதிகாரி அண்ணாமலை (டி.ஆர்.ஓ.,), கலெக்டர் பொறுப்பை கூடுதலாக கவனித்து வருகிறார். கலெக்டர் மாற்றப்பட்டதும், புதிய கலெக்டர் விரைவில் நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. கலெக்டர் மாற்றம் செய்யப்பட்டு, இன்றுடன் 108 நாட்கள் ஆகிறது. ஆனால், இதுவரை, புது கலெக்டர் நியமிக்கப்படாதது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் குறை கேட்பு முகாமிற்கு வரும் மக்கள், டி.ஆர்.ஓ., அண்ணாமலையைச் சந்தித்து மனுவைக் கொடுத்துச் செல்கின்றனர். இதுகுறித்து சமூக ஆர்வலர் மாயாண்டி கூறும்போது,''கலெக்டர்கள் மாற்றத்துக்குப்பின் சென்னைக்கு இன்னும் புது கலெக்டர் போடவில்லை. மக்கள் டி.ஆர்.ஓ.,வைத்தான் சந்திக்க வேண்டியுள்ளது. அவரும் அடிக்கடி 'மீட்டிங்' சென்று விடுகிறார். கீழே உள்ள அதிகாரியிடம்தான் செல்ல வேண்டியுள்ளது. மக்கள் நலன் கருதி, தலைநகர் சென்னைக்கு தமிழக அரசு விரைவில், புது கலெக்டரை நியமிக்க வேண்டும்'' என்றார்.