/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கொசுப்படையால் திணறும் மகளிர் காவல் படை
/
கொசுப்படையால் திணறும் மகளிர் காவல் படை
ADDED : செப் 20, 2011 12:25 AM
சென்னை : ஒரு போலீஸ் நிலையம் எந்த சூழலில் இருக்கக் கூடாது என்பதற்கு உதாரணமாக, மிக மோசமான சுற்றுச் சூழலில் இயங்கி வருகிறது, ஆவடி அனைத்து மகளிர் போலீஸ் நிலையம்.
இதை, மேம்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.சென்னை, ஆவடி தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்புப் பகுதியில் உள்ள கட்டடத்தில், 1994ம் ஆண்டு ஆகஸ்ட் 29ம் தேதி அன்று, அன்றைய காவல் துறைத் தலைவர் ஸ்ரீபால், 'அனைத்து மகளிர் காவல் நிலையத்தை' திறந்து வைத்தார். தற்போது இந்த போலீஸ் நிலையத்தில் 1 இன்ஸ்பெக்டர், 4 சப்-இன்ஸ்பெக்டர்கள், 20 போலீசார் பணியாற்றி வருகின்றனர். ஆவடி, பட்டாபிராம் சுற்று வட்டாரத்திலுள்ள 50க்கும் மேற்பட்ட கிராம, நகர பகுதிகளைச் சேர்ந்த மக்களின் சேவைக்காக, இந்த போலீஸ் நிலையம் இயங்கி வருகிறது.போலீஸ் நிலையம், சாலை மட்டத்திலிருந்து தாழ்வான பகுதியில் அமைந்துள்ளது; சுற்றுச் சுவர் இல்லை. வீட்டு வசதி வாரியத்தால் கட்டப்பட்ட கட்டடத்தின் உறுதியும், இப்போது நம்பிக்கையற்றதாக உள்ளது. பாதுகாக்கப்பட்ட குடிநீர் உள்ளிட்ட இதர தேவைகளுக்கான தண்ணீர் வசதியும் இல்லை.போலீஸ் நிலையத்தின் சுற்றுச்சூழல் மிக மோசமாக உள்ளது. நிலையத்தைச் சுற்றி, வற்றாத ஜீவ நதியாக கழிவுநீர் தேங்கி உள்ளது. அருகில் உள்ள கழிவுநீர் கால்வாயும், திறந்த நிலையில் உள்ளது. இது தவிர வீடுகளில் இருந்து வீசப்பட்டு, போலீஸ் நிலையத்தைச் சுற்றி குவியும் குப்பை கழிவுகள், காவல் நிலையத்தை சுற்றி தேங்குவதால், உணவுப் பொருளுக்காக பன்றி, நாய்களின் கூட்டம் அதிகரித்துள்ளது. இதனால் கழிவறைகளை விட மோசமான நிலையில் துர்நாற்றம் வீசுகிறது.மழைக் காலத்தில் போலீஸ் நிலையம், 'கழிவுநீர் தீவு' போல் மாறிவிடுகிறது. இதனால், புகார் மற்றும் வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள், விசாரணைக்காக இங்கு வர தடுமாறுகின்றனர். மாலை நேரம் துவங்கியதும், போலீசாரையே மிரட்டும் அளவிற்கு, கொசுக்களின் படையெடுப்பு நடக்கிறது.இந்த சூழலில் சிக்கி இருக்கும் போலீஸ் நிலையத்தின், 'லாக்கப்' அறைகளில் குற்றவாளிகளை அடைத்தால், அவர்களின் நிலை அவ்வளவு தான். குப்பை மற்றும் கழிவுநீர் ஆகியவற்றை அகற்ற, ஆவடி நகராட்சி அதிகாரிகளிடம் பல முறை தகவல் தெரிவித்தும், உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று போலீசார் புலம்புகின்றனர். தமிழக அரசு, 59 புறக்காவல் நிலையங்களில், 12 நிலையங்களை மேம்படுத்த உள்ள நிலையில், ஆவடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தையும் மேம்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை, போலீசாரிடம் மட்டுமல்லாமல், இங்கு வந்து செல்லும் அனைத்து தரப்பினரிடமும் எழுந்துள்ளது.
அ.ஜமால் மொய்தீன்

