/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சென்னை துறைமுக லாரி ஓட்டுனர் வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு
/
சென்னை துறைமுக லாரி ஓட்டுனர் வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு
சென்னை துறைமுக லாரி ஓட்டுனர் வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு
சென்னை துறைமுக லாரி ஓட்டுனர் வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு
ADDED : ஏப் 10, 2025 12:20 AM
சென்னை, சென்னை துறைமுக 'பார்க்கிங் பிளாசாவில்' கட்டணம் வசூலிக்கும் நடைமுறைக்கு எதிராக, நேற்று முதல் வேலை நிறுத்தத்தை அறிவித்திருந்த சென்னை துறைமுக கனரக வாகன உரிமையாளர் சங்கங்கள், அந்த முடிவை ஒத்திவைப்பதாக அறிவித்துள்ளன.
சென்னை துறைமுகத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள பார்க்கிங் பிளாசாவில், இன்று முதல் 550 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்பட உள்ளதாக சென்னை துறைமுக ஆணையம் கடந்த மாதம் அறிவித்தது.
இதை எதிர்த்து நேற்று காலை 6:00 மணி முதல் வேலை நிறுத்தத்தை அறிவித்திருந்த இந்திய கனரக வாகன சங்கம் மற்றும் கடல் துறைமுக டிரெய்லர் உரிமையாளர்கள் சங்கம், இம்முடிவை ஒத்திவைப்பதாக தெரிவித்துள்ளன. எனினும், துறைமுக ஆணையத்தின் முடிவுக்கு எதிராக போராட்டம் நடத்த உள்ளதாகவும் தெரிவித்துள்ளன.
துறைமுகத்துக்கு வரும் டிரெய்லர் மற்றும் லாரிகளுக்கு பார்க்கிங் உள்ளிட்ட வசதிகளை வழங்குவதற்காக புதிதாக கட்டப்பட்டுள்ள பார்க்கிங் பிளாசாவை, ஏப்ரல் 10ம் தேதி முதல் செயல்பாட்டிற்கு கொண்டு வர உள்ளதாக, சென்னை துறைமுக ஆணையம் தெரிவித்திருந்தது.
இங்கு பார்க்கிங் வசதி மட்டுமின்றி, ஓய்வறைகள், உணவகம் மற்றும் தங்கும் விடுதி ஆகியவையும் கட்டப்பட்டுள்ளன. இந்த சேவைகளை பயன்படுத்த 550 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும் என, அறிவிக்கப்பட்டது.
ஆனால், சரக்கு போக்குவரத்துக்காக தங்களுக்கு கிடைக்கும் கட்டணம் ஏற்கனவே குறைவாக இருக்கும் நிலையில், பார்க்கிங்குக்கு கட்டணம் வசூலிப்பது தங்கள் லாபத்தை பாதிக்கும் என, வாகன உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கடந்த 2014 முதல் சரக்கு கட்டணம் மாற்றமின்றி தொடர்வதாகவும்; இதை உயர்த்த பல முறை கோரிக்கை வைத்தும், இதுவரை எந்த முன்னேற்றமும் இல்லை என்றும், அவர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து துறைமுக ஆணைய அதிகாரி ஒருவர் கூறுகையில், '600 வாகனங்களை நிறுத்தும் வகையில், 45 கோடி ரூபாய் செலவில், பார்க்கிங் பிளாசா கட்டப்பட்டுள்ளது. இதை பராமரிப்பதற்கு ஒப்பந்ததாரரை நியமிக்க வேண்டியுள்ளது. ஒப்பந்ததாரருக்கு ஏற்படக்கூடிய செலவை சமாளிக்க, பார்க்கிங் கட்டணம் வசூலித்தாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது' என்றார்.

