ADDED : ஜன 12, 2025 10:54 PM
சென்னை:கலை பண்பாட்டுத்துறை சார்பில், 'சென்னை சங்கமம் நம்ம ஊர் திருவிழா' இன்று துவங்குகிறது. வரும் 17 ம் தேதி வரை சென்னையில், 18 இடங்களில் கொண்டாடப்பட உள்ளது.
கடந்த மூன்றாண்டுகளாக இந்த விழா, பொங்கல் பண்டிகையையொட்டி கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தாண்டு, 'சென்னை சங்கமம் நம்ம ஊரு திருவிழா' இன்று துவங்குகிறது. மாலை 6:00 மணிக்கு, கீழ்ப்பாக்கம் ஈ.வெ.ரா., நெடுஞ்சாலையில் உள்ள ஏகாம்பரநாதர் கோவில் திடலில், இந்த நிகழ்ச்சியை, முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைக்க உள்ளார்.
இன்றைய நிகழ்ச்சியை, இசையமைப்பாளர் பால் ஜேக்கப் வடிவமைத்துள்ளார். அதில், புகழ்பெற்ற கலைஞர்கள் பங்கேற்கும் கர்னாடக இசை பாடல்கள், கானா பாடல்கள், பரதநாட்டியம், கரகம், காவடி, புரவியாட்டம், பன்முகப்பறை, பறை, கோலாட்டம், பம்பையாட்டம், பழங்குடியினரின் கோத்தர் நடனம், தோடர் நடனம் உள்ளிட்டவையும் நடக்க உள்ளன.
இதைத் தொடர்ந்து, நாளை முதல், பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரை, எழும்பூர் அருங்காட்சியகம், ராயபுரம் ராபின்சன் பூங்கா, எழும்பூர் அருங்காட்சியகம் உட்பட, 18 இடங்களில் நடக்கின்றன. வரும், 17 ம் தேதி இந்த திருவிழா நிறைவடைகிறது.
***