/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஒருங்கிணைந்த காவல் நிலைய கட்டடம் கொளத்துாரில் முதல்வர் திறந்து வைத்தார் நம்பிக்கை மையம் திட்டம் துவக்கம்
/
ஒருங்கிணைந்த காவல் நிலைய கட்டடம் கொளத்துாரில் முதல்வர் திறந்து வைத்தார் நம்பிக்கை மையம் திட்டம் துவக்கம்
ஒருங்கிணைந்த காவல் நிலைய கட்டடம் கொளத்துாரில் முதல்வர் திறந்து வைத்தார் நம்பிக்கை மையம் திட்டம் துவக்கம்
ஒருங்கிணைந்த காவல் நிலைய கட்டடம் கொளத்துாரில் முதல்வர் திறந்து வைத்தார் நம்பிக்கை மையம் திட்டம் துவக்கம்
ADDED : பிப் 11, 2026 06:18 AM

பெரம்பூர்;pகொளத்துாரில், 11.37 கோடி ரூபாயில் ஒருங்கிணைந்த காவல் அலுவலக கட்டடத்தை முதல்வர் ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார். பொதுமக்கள் பயமின்றி புகார் தர வசதியாக, 'நம்பிக்கை இருக்கை' என்ற புதிய திட்டத்தையும் துவக்கி வைத்தார்.
கொளத்துார் சிவ இளங்கோ சாலையில், சி.எம்.டி.ஏ., சார்பில், 11.37 கோடி ரூபாய் செலவில், நான்கு தளங்களுடன் ஒருங்கிணைந்த காவல் நிலைய வளாகம் கட்டப்பட்டுள்ளது.
இதில், பெரவள்ளூர் காவல் நிலையம், போக்குவரத்து காவல் நிலையம், மாவட்ட சைபர் குற்றப்பிரிவு, கொளத்துார் மகளிர் காவல் நிலையம், மேற்கு மண்டல தீவிர குற்றத்தடுப்பு பிரிவு, கொளத்துார் துணை கமிஷனர் அலுவலகம் ஆகியவை அமைகிறது.
இந்த ஒருங்கிணைந்த காவல் அலுவலக கட்டடத்தை, முதல்வர் ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.
நம்பிக்கை மையம்
ஒருங்கிணைந்த காவல் நிலைய வாயிலில், 'நம்பிக்கை இருக்கை' என்ற புதிய திட்டத்தையும் துவக்கி வைத்தார்.
இதன்படி, பாதிக்கப்பட்டவர்கள் காவல் நிலையம் வந்து, பயமின்றி புகாரை தரலாம். புகாரை கனிவோடு பெற்று, நம்பிக்கை அளித்து அனுப்பி வைக்கும் வகையில், இந்த நம்பிக்கை இருக்கை அமைக்கப்பட்டு உள்ளதாக காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சியில், பொறுப்பு டி.ஜி.பி., வெங்கடராமன், கமிஷனர் அருண், அமைச்சர் சேகர்பாபு, மேயர் பிரியா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
பல்வேறு திட்டங்கள்
குடிநீர் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் சார்பில், 2.82 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்பட்டு உள்ள, தானியங்கி கழிவுநீர் உந்து நிலையத்தை, முதல்வர் ஸ்டாலின் ஆய்வு செய்தார்.
பின், கொளத்துார் ஜவகர் நகர், சிவ இளங்கோ சாலையில், 3.45 கோடி ரூபாய் மதிப்பில், 5 லட்சம் லிட்டர் மழைநீர் சேகரிப்பு அமைப்பு, நடைபாதை, இறகுப்பந்து விளையாட்டுத்திடல், புதிய நீருறிஞ்சி பூங்காவிற்கு முதல்வர் அடிக்கல் நாட்டினார்.
பணிகள் முடியவில்லை
நான்கு தளங்களுடன் அமைக்கப்பட்டுள்ள, ஒருங்கிணைந்த காவல் நிலைய கட்டடத்தின் முதல் இரண்டு தளங்களில் மட்டுமே பணிகள் முடிக்கப்பட்டு உள்ளன. மேலும், 3, 4ம் தளங்களில் பணிகள் தொடர்வதால் யாரும் அனுமதிக்கப்படவில்லை.
வரவேற்பாளர்கள்
மேஜை என்னாச்சு?
பொதுமக்களுக்கும் போலீசாருக்கும் நல்லுறவை ஏற்படுத்த, 2016ல் மாநிலம் முழுதும் காவல் நிலையங்களில், வரவேற்பாளர் மேஜை அமைக்கப்பட்டு, பெண் காவலர்கள் நியமிக்கப்பட்டனர்.
அவர்களுக்கு, காவலர் பயிற்சி கல்லுாரியில், பொதுமக்களிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்; பேசி பழக வேண்டும் என, உளவியல் ரீதியாக பல்வேறு நிபுணர்கள் பயிற்சி அளித்தனர்.
அவ்வாறு பயிற்சி அளித்து வரவேற்பாளர் பணியில் அமர்த்தப்பட்ட காவலர்களுக்கு மாற்றுப்பணி ஒதுக்கப்பட்டதால், தற்போது காவல் நிலையங்களில் வரவேற்பாளர் என்ற மேஜை கூட காணாமல் போய்விட்டது.
இந்நிலையில்தான், பாதிக்கப்பட்டோர் தயக்கமின்றி வந்து புகார் அளிக்கும் வகையில், 'நம்பிக்கை இருக்கை' என்ற திட்டத்தை, முதல்வர் ஸ்டாலின் நேற்று துவக்கி வைத்துள்ளார். இந்த திட்டம் மாநிலம் முழுதும் விரிவுப்படுத்த இருப்பதாகவும் போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. இந்த திட்டத்தையாவது, பாதியில் விடாமல் முழுமையாக நிறைவேற்ற வேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

