/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
எல்லை வரையறை பணி இழுபறியால் குழப்பம்! கடன் தவணையை விடுவிக்க வங்கிகள் மறுப்பு
/
எல்லை வரையறை பணி இழுபறியால் குழப்பம்! கடன் தவணையை விடுவிக்க வங்கிகள் மறுப்பு
எல்லை வரையறை பணி இழுபறியால் குழப்பம்! கடன் தவணையை விடுவிக்க வங்கிகள் மறுப்பு
எல்லை வரையறை பணி இழுபறியால் குழப்பம்! கடன் தவணையை விடுவிக்க வங்கிகள் மறுப்பு
UPDATED : பிப் 11, 2026 07:59 AM
ADDED : பிப் 11, 2026 06:17 AM

சென்னை: பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை சுற்றி ராம்சார் தலமாக அறிவிக்கப்பட்ட பகுதியின் எல்லை வரையறை பணிகளில் இழுபறி நீடிக்கிறது. சிக்கலுக்கு தீர்வு காணப்படாததால், ஏற்கனவே வாங்கிய கடனுக்கான தவணைகளையும் வங்கிகள் விடுவிக்க மறுத்து வருவதாக புகார் எழுந்துள்ளது. பழைய வீடுகளை வாங்கவும், விற்கவும் முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
சென்னை, பள்ளிக்கரணை சதுப்பு நிலம், 2022ல் ராம்சார் தலமாக அறிவிக்கப்பட்டது. இதன் வெளிச்சுற்று பகுதிக்கான எல்லை வரையறை பணிகளை தமிழக அரசு இன்னும் முடிக்கவில்லை.
சதுப்பு நிலத்தை ஒட்டி கட்டப்படும் அடுக்குமாடி கட்டடங்கள் தொடர்பான வழக்கை விசாரித்த பசுமை தீர்ப்பாயம், 1 கி.மீ., சுற்றளவுக்கு கட்டுமான திட்டங்களுக்கு தடை விதித்தது.
அதன்படி, 16 கிராமங்களில், 1,300 சர்வே எண்களுக்கு உட்பட்ட நிலங்களில் வீடு கட்டுவது தடை செய்யப்பட்டது.
பசுமை தீர்ப்பாய உத்தரவுப்படி, புதிய கட்டுமான திட்டங்களை அனுமதிக்க மட்டுமே தடை விதிக்கப்பட்டது. ராம்சார் தலத்துக்கான எல்லை வரையறை செய்தால், இந்த தடை நீக்கப்படலாம்.
இதனால், ராம்சார் தலங்களின் எல்லை வரையறை பணிகளை தமிழக அரசு துவக்கியது. பள்ளிக்கரணையில் மட்டுமே பிரச்னை வந்த நிலையில், தமிழகத்தில் உள்ள அனைத்து ராம்சார் தலங்களுக்கும், எல்லை வரையறை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இப்பகுதிகளில், ஏற்கனவே கட்டட அனுமதி பெற்று பணிகள் முடிந்த கட்டடங்களுக்கும், பணி நிறைவு சான்று வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளது.
முன்வந்த அதிகாரிகள்
பல்வேறு அமைப்புகளின் தொடர் வலியுறுத்தலால், பசுமை தீர்ப்பாய உத்தரவுக்கு முன் பணிகள் முடிந்த கட்டடங்களுக்கு பணி நிறைவு சான்று வழங்க, சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் முன்வந்துள்ளனர்.
இந்நிலையில், இங்கு ஏற்கனவே திட்ட அனுமதி பெற்று பணிகள் நடந்து வரும் திட்டங்களில் பொதுமக்கள் வீடு வாங்க வங்கிக்கடன் பெற்றுள்ளனர். அவர்களுக்கு, வீட்டுக்கடனில் அடுத்தடுத்த தவணை தொகைகளை விடுவிக்க, வங்கிகள் மறுப்பதாக புகார் எழுந்துள்ளது.
இதுகுறித்து, இந்திய கட்டுமான வல்லுனர்கள் சங்க, தென்னக மைய நிர்வாகி எஸ்.ராமபிரபு கூறியதாவது:
நீதிமன்ற உத்தரவால், ராம்சார் தல எல்லை வரையறையை அரசு விரைந்து முடிக்கும் என எதிர்பார்த்தோம். இன்னும் பணிகள் முடியவில்லை.
ஏற்கனவே ஒப்புதல் பெற்ற திட்டங்களில் பணிகளை தொடர, வங்கிகள் கடன் தவணையை விடுவிக்க மறுக்கின்றன. இத்திட்டங்களில், புதிதாக யாராவது வீடு வாங்க முன்வந்தாலும், அவர்களுக்கு வங்கிக்கடன் மறுக்கப்படுகிறது.
பழைய வீடுகளை வாங்கவும், வங்கிக்கடன் மறுக்கப்படுவதால் சொத்து உரிமையாளர்கள், அவசரத்துக்கு நிதி திரட்ட முடியாமல் அவதிப்படுகின்றனர்.
தென்சென்னையில் சொத்து விற்பனை அதிகமாக நடக்கும் இப்பகுதியில், தற்போது தேக்கம் அடைந்துள்ளது.
விரைவில் சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட உள்ள நிலையில், இப்பிரச்னை முடிவுக்கு வர ஆறு மாதத்திற்கும் மேலாகிவிடுமே என்ற அச்சம் எழுந்துள்ளது. தமிழக அரசு இதில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

