/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பருவமழையை எதிர்கொள்வோம் முதல்வர் ஸ்டாலின் உறுதி
/
பருவமழையை எதிர்கொள்வோம் முதல்வர் ஸ்டாலின் உறுதி
ADDED : செப் 25, 2024 12:09 AM

சென்னை, கொளத்துார் ஜி.கே.எம்., காலனி, 12வது தெருவில், சென்னை மாநகராட்சி தொடக்கப் பள்ளிக்கு, 'சிங்கார சென்னை 2.0' நிதி 2.43 கோடி; எம்.பி., வில்சன் தொகுதி மேம்பாட்டு நிதி 1.80 கோடி ரூபாய் என, மொத்தம் 4.23 கோடி ரூபாயில் பள்ளிக் கட்டடம் கட்டப்பட்டுள்ளது.
மதுரை சாமி மடத்தில், 26.43 லட்சம் ரூபாய் செலவில், உடற்பயிற்சிக் கூடம் புதுப்பிக்கப்பட்டது. நேர்மை நகர் மயான பூமியில், 26.29 லட்சம் ரூபாய் செலவில், நீத்தார் நினைவு மண்டபம் புதிதாக கட்டப்பட்டது.
இவற்றை முதல்வர் ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார். பள்ளி மாணவ, மாணவியருக்கு, புத்தகப்பை மற்றும் கல்வி உபகரணங்களை வழங்கினார்.
முத்துகுமரப்பா தெருவில் 13.47 கோடி ரூபாய் மதிப்பில், சமுதாய நலக்கூடம் கட்டப்படுகிறது. இதை பார்வையிட்ட முதல்வர், பணிகளை விரைவாக முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில், பேப்பர் மில்ஸ் சாலையில், வருவாய் துறைக்கு சொந்தமான இடத்தில், தாலுகா அலுவலகம், சார் பதிவாளர் அலுவலகம், பகிர்ந்த பணியிடம் மற்றும் வணிக வளாகங்கள், 32 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட உள்ளது. இந்த இடத்தையும் முதல்வர் பார்வையிட்டார்.
பின், முதல்வர் ஸ்டாலின் கூறியதாவது:
வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம். அனைத்து மாவட்ட நிர்வாகிகளுடன் தலைமைச் செயலர் ஆலோசனை நடத்தி உள்ளார்.
இரண்டு நாட்களில், நானும் ஆலோசனை கூட்டம் நடத்த உள்ளேன். கொளத்துார் தொகுதி என் சொந்த தொகுதி. பகுதி மக்கள் என்னை அவர்கள் வீட்டு பிள்ளை போல தான் பார்ப்பர்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிகழ்ச்சியில், அமைச்சர்கள் நேரு, சேகர்பாபு, சென்னை மேயர் பிரியா, எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் அலுவலர்கள் பங்கேற்றனர்.