/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சிந்தாதிரிப்பேட்டை மீன் அங்காடி ஆமை வேக பணியால் அவதி
/
சிந்தாதிரிப்பேட்டை மீன் அங்காடி ஆமை வேக பணியால் அவதி
சிந்தாதிரிப்பேட்டை மீன் அங்காடி ஆமை வேக பணியால் அவதி
சிந்தாதிரிப்பேட்டை மீன் அங்காடி ஆமை வேக பணியால் அவதி
ADDED : அக் 23, 2024 12:58 AM

சென்னை, சிந்தாதிரிப்பேட்டையில் நவீன மீன் அங்காடி அமைக்கும் பணி ஆமை வேகத்தில் நடைபெற்று வருவதால், மீன் வியாபாரிகள் அதிருப்தியில் உள்ளனர்.
சிந்தாதிரிப்பேட்டை, மேற்கு கூவம் சாலை பூங்கா ரயில் நிலையம் அருகே, நவீன மீன் அங்காடி, 2.19 கோடி ரூபாய் செலவில், 1,022 ச.மீ., பரப்பளவில், 102 கடைகளுடன் அமைக்க திட்டமிடப்பட்டது.
மேலும், மீன் கழிவுகளை வெளியேற்றும் சுத்திகரிப்பு நிலையம், குப்பையை எளிதாக அகற்றுவதற்கான அமைப்புகள், வழிகாட்டி பலகைகள் மற்றும் வாகன நிறுத்தங்களுடன் அமைக்க முடிவு செய்யப்பட்டது.
இத்திட்டத்தை துணை முதல்வர் உதயநிதி, கடந்த ஆண்டு ஜூலை, 10ம் தேதி துவக்கி வைத்தார். அப்போது,'6 மாத காலத்திற்குள் நவீன மீன் அங்காடி கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்' என, அதிகாரிகள் கூறினர்.
ஆனால், ஓராண்டிற்கு மேலாகியும் மீன் அங்காடி கட்டுமான பணி அமை வேகத்தில் நடைபெற்று வருகிறது.
இதுகுறித்து ஒப்பந்ததாரரிடம் கேட்ட போது,'90 சதவீத பணிகள் முடிவடைந்து விட்டன. தற்போது அங்காடியில் வண்ணம் பூசும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ஒரு மாதத்திற்குள் மீன் அங்காடி பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்' என்றார்.
இந்நிலையில், தற்போது அருணாச்சலம் சாலையில் உள்ள மீன் மார்க்கெட்டில் உள்ள விற்பனைக்கான இடவசதி கூட, புதிதாக கட்டப்பட்ட அங்காடியில் இல்லை என, மீன் வியாபாரிகள் குற்றம்சாட்டுகின்றனர்.

