/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சென்னையில் வேகமாக பரவுது வைரஸ் காய்ச்சல் அலட்சியம் வேண்டாம்! தினமும் 1,000 பேருக்கு மேல் பாதிப்பால் அதிர்ச்சி
/
சென்னையில் வேகமாக பரவுது வைரஸ் காய்ச்சல் அலட்சியம் வேண்டாம்! தினமும் 1,000 பேருக்கு மேல் பாதிப்பால் அதிர்ச்சி
சென்னையில் வேகமாக பரவுது வைரஸ் காய்ச்சல் அலட்சியம் வேண்டாம்! தினமும் 1,000 பேருக்கு மேல் பாதிப்பால் அதிர்ச்சி
சென்னையில் வேகமாக பரவுது வைரஸ் காய்ச்சல் அலட்சியம் வேண்டாம்! தினமும் 1,000 பேருக்கு மேல் பாதிப்பால் அதிர்ச்சி
ADDED : நவ 25, 2025 12:11 AM

வடகிழக்கு பருவமழை விட்டு விட்டு பெய்து வரும் நிலையில், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. சென்னையில் மட்டும், தினமும் 1,000த்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வருவதாக, மாநகராட்சியே தெரிவித்துள்ளது. சாதாரண காய்ச்சல் என்றாலும், ஆரம்பத்திலேயே சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும்; இந்த விஷயத்தில் அலட்சியம் வேண்டாம் என, டாக்டர்கள் எச்சரித்துள்ளனர்.
வடகிழக்கு பருவமழை சென்னையில் பரவலாக மழை பெய்து வருகிறது. மேலும், பனிப்பொழிவு, வெயில் என, பருவநிலை மாறி வருகிறது. இதன் காரணமாக, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், காய்ச்சலுடன், சுவாசப்பாதை தொற்றுகளின் பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன.
இதனால், அரசு மருத்துவமனைகளுக்கு, காய்ச்சல் பாதிப்புடன் அதிக அளவில் படையெடுத்து வருகின்றனர். புறநோயாளிகள் பிரிவில் கூட்டம் நிரம்பி வழிகிறது. தனியார் மருத்துவமனைகளில், சிறு கிளினிக்குகளிலும் நுாற்றுக்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக காத்துக்கிடப்பது தொடர்கிறது.
அதீத காய்ச்சல் பாதிப்பு மட்டுமன்றி இருமல், சளி, தொண்டை வலி, உடல் வலி, சோர்வு ஆகிய பாதிப்புகளும் சேர்ந்தே காணப்படுகின்றன. 'இன்ப்ளுயன்சா' வைரஸ் தொற்றுகள் தான் இதற்கு காரணம் என, டாக்டர்கள் கூறுகின்றனர்.
இது குறித்து, டாக்டர்கள் கூறியதாவது:
குளிர் மற்றும் மழை காலங்களில், 'எச்1 என்1, எச்3 என்2' இன்ப்ளுயன்சா வைரஸ் தொற்றுகள் அதிகம் பரவி வருகிறது. ஐந்து நாட்கள் கடுமையான இருமல், தொண்டை வலி, உடல் வலியுடன் மருத்துவமனைகளுக்கு வருவோர் அதிகரித்து வருகின்றனர்.
மருத்துவமனைக்கு வருவோரில், 10 பேரில் 8 பேருக்கு நுரையீரல் சார்ந்த சுவாசப்பாதை தொற்று பாதிப்புள்ளது. பெரும்பாலானவர்களுக்கு, ஒரு வாரத்தில் பிரச்னைகள் சரியாகிவிடுகின்றன. சிலருக்கு மட்டும், காய்ச்சல், சளி, இருமல் பாதிப்புகள், 10 நாட்களுக்கு மேல் தொடர்கிறது. சாதாரண காய்ச்சல் என்றாலும் அலட்சியம் வேண்டாம்; மருத்துவமனை செல்வது அவசியம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
மேலும், காய்ச்சல், சளி, இருமலால் பாதிக்கப்படுவோர், தங்களிடமிருந்து குடும்பத்தில் உள்ளோருக்கும், மற்றவர்களுக்கு பரவாமல் இருக்க முகக்கவசம் அணிந்து கொள்ள வேண்டும் எனவும், டாக்டர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.
இதுகுறித்து, சென்னை மாநகராட்சி நகர நல அலுவலர் ஜெகதீசன் கூறியதாவது:
சென்னையில் டெங்கு பாதிப்பு கட்டுக்குள் உள்ளது. உயிரிழப்புகள் ஏற்படுத்தக்கூடிய வகையிலான பாதிப்புகள் இல்லை. அதே நேரம், பருவ காலத்தில் ஏற்படக்கூடிய வைரஸ் காய்ச்சல் பாதிப்பு அதிகமாக உள்ளது.
இவற்றால், தினசரி 1,000 பேர் வரை பாதிக்கப்பட்டு, புறநோயாளிகளாக சிகிச்சை பெறுகின்றனர். அவர்களில், 30 பேர் வரை மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுகின்றனர். அவ்வாறு அனுமதிக்கப்படுவோரும், ஒரு வாரத்தில் குணமடைந்து வீடு திரும்புகின்றனர்.
காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டால் அலட்சியம் காட்டாமல், மாநகராட்சி நகர்ப்புற ஆரம்ப நிலையங்கள் மற்றும் அருகிலுள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற வேண்டும். சுயமாக மருந்து கடைகளில் மருந்துகளை வாங்கி சாப்பிடக்கூடாது. டாக்டரின் ஆலோசனைப்படி மட்டுமே மாத்திரை, மருந்துகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.
காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் முகக்கவசம் அணிவதுடன், அடிக்கடி கைகளை சுத்தமாக கழுவ வேண்டும். இருமலின் போது, அடுத்தவர் மீது பரவாதவாறு கைக்குட்டை பயன்படுத்த வேண்டும்.
இந்த வகை காய்ச்சல் தீவிர தன்மை இல்லாததால், மக்கள் அச்சப்பட வேண்டாம். ஒரு பகுதியில் ஏற்படும் காய்ச்சலுக்கு ஏற்ப, அங்கு தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்படுகிறது; மருத்துவ முகாமும் நடத்தப்பட்டு, காய்ச்சல் பரவல் கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர் -

