/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மாநகர பேருந்து ஓட்டுநர் மாரடைப்பால் உயிரிழப்பு தறிகெட்டு ஓடியதால் பாதசாரி பலி; 4 கார்கள் சேதம்
/
மாநகர பேருந்து ஓட்டுநர் மாரடைப்பால் உயிரிழப்பு தறிகெட்டு ஓடியதால் பாதசாரி பலி; 4 கார்கள் சேதம்
மாநகர பேருந்து ஓட்டுநர் மாரடைப்பால் உயிரிழப்பு தறிகெட்டு ஓடியதால் பாதசாரி பலி; 4 கார்கள் சேதம்
மாநகர பேருந்து ஓட்டுநர் மாரடைப்பால் உயிரிழப்பு தறிகெட்டு ஓடியதால் பாதசாரி பலி; 4 கார்கள் சேதம்
ADDED : ஜூலை 14, 2025 02:37 AM

சென்னை:ஓட்டுநருக்கு மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்ததால், கட்டுப்பாட்டை இழந்த மாநகர பேருந்து மோதியதில் பாதசாரி பலியானார்; நான்கு கார்கள் சேதமாகின. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஓட்டுநரும் உயிரிழந்தார்.
கோயம்பேடில் இருந்து கிளாம்பாக்கத்திற்கு இயக்கப்படும் தடம் எண். 70சி மாநகர பேருந்து, வடபழநி பணிமனையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
கோயம்பேடில் இருந்து முதல் சேவை துவக்க, வடபழநியில் இருந்து நேற்று காலை 6:00 மணிக்கு, அந்த பேருந்து புறப்பட்டது. பேருந்தை, தர்மபுரி மாவட்டம், ஆரூர் பகுதியைச் சேர்ந்த வேலுமணி, 58, இயக்கினார்.
சோமங்கலத்தைச் சேர்ந்த ஷாஜு, 34, நடத்துநராக பணியில் இருந்தார்; பயணியர் யாரும் இல்லை.
காலை 6:10 மணியளவில், வடபழநி 100 அடி சாலை, அரும்பாக்கம் அருகில் சென்றபோது, ஓட்டுநர் வேலுமணிக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு, 'ஸ்டேரிங்' மீது மயங்கி விழுந்தார்.
இதில் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, சாலையோரமாக தறிகெட்டு ஓடியதால், அதிர்ச்சியடைந்த நடத்துநர் ஷாஜு, பேருந்தை நிறுத்த முயன்றுள்ளார்.
எனினும், அவ்வழியே சாலையோரம் வந்த பாதசாரி மீது மோதியது. பின், மூன்று 'சுசூகி ஸ்விப்ட்' மற்றும் 'ஹூண்டாய் ஐ10' உட்பட நான்கு கார்களை வரிசையாக மோதி, சிறிது துாரம் ஓடி நின்றது.
இந்த விபத்தில் சிக்கியபாதசாரி, சம்பவ இடத்திலேயே பலியானார். பேருந்தின் முன்பக்கமும், நான்கு கார்களும் சேதமடைந்தன.
அங்கிருந்தோர், மயங்கி கிடந்த ஓட்டுநரை மீட்டு, முதலுதவி செய்து, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு, அவரை பரிசோதித்த டாக்டர்கள், மாரடைப்பால் ஓட்டுநர் வேலுமணி இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
அண்ணா நகர் போக்குவரத்து போலீசார், விபத்தில் சேதமான வாகனங்களை 'கிரேன்' இயந்திரம் மூலமாக மீட்டனர். விசாரணையில், விபத்தில் பலியான பாதசாரி, திருவல்லிக்கேணியைச் சேர்ந்த சசிகுமார், 63 என்பதும், மனைவியிடம் கோபித்துக்கொண்டு, பல நாட்களாக வீட்டிற்கு செல்லாமல், சுற்றி திரிந்ததும் தெரிந்தது.
ஓட்டுநர் வேலுமணி, வடபழநி பணிமனையில் தங்கி பணிபுரிந்து வந்தார். மனைவி மற்றும் குடும்பத்தினர் தர்மபுரியில் உள்ளனர். சாலையில் நிறுத்தப்பட்டு சேதமான கார்கள், அதேபகுதியில் உள்ள தனியார் விடுதியில் தங்கியிருந்தோரின் கார்கள் என்பது தெரிந்தது.
தொடர்ந்து, போலீசார் விசாரித்து வருகின்றனர்.