/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சி.எம்.டி.ஏ., ஆன்லைன் முறை அமலாகியும் பணி நிறைவு சான்று கிடைப்பதில் தாமதம்
/
சி.எம்.டி.ஏ., ஆன்லைன் முறை அமலாகியும் பணி நிறைவு சான்று கிடைப்பதில் தாமதம்
சி.எம்.டி.ஏ., ஆன்லைன் முறை அமலாகியும் பணி நிறைவு சான்று கிடைப்பதில் தாமதம்
சி.எம்.டி.ஏ., ஆன்லைன் முறை அமலாகியும் பணி நிறைவு சான்று கிடைப்பதில் தாமதம்
ADDED : ஜூலை 22, 2025 12:44 AM
சென்னை, சென்னையில் புதிதாக கட்டடங்களுக்கு, பணி நிறைவு சான்றிதழ் வழங்கும் பணிகள் ஆன்லைன் முறைக்கு மாறியும், அதிகாரிகள் அலட்சியத்தால் தாமதம் ஏற்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சென்னை பெருநகரில் கட்டுமான திட்டங்களுக்கு, சென்னை பெருநகர் வளர்ச்சிக்குழுமமான சி.எம்.டி.ஏ., அனுமதி வழங்கி வருகிறது. கட்டுமான நிறுவனங்கள், கட்டடங்களை கட்டி முடித்ததும், சி.எம்.டி.ஏ.,வின் அமலாக்க பிரிவில், பணி நிறைவு சான்று கோரி விண்ணப்பிக்க வேண்டும்.
அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் கட்டடத்தை ஆய்வு செய்து, விதிமீறல் இன்றி கட்டியிருந்தால், பணி நிறைவு சான்று வழங்குவர்.
இந்த சான்று பெற்றால் மட்டுமே, கட்டுமான அனுமதி பெறும் நிலையில் வசூலிக்கப்பட்ட காப்புத்தொகை திருப்பித்தரப்படும். விதிமீறல் கண்டுபிடிக்கப்பட்டால், காப்புத்தொகை அரசின் கணக்கில் சேர்க்கப்படும். பணி நிறைவு சான்று பெற்ற பின், வீட்டை உரியவர்களுக்கு ஒப்படைக்க வேண்டும்.
ஆனால், சில மாதங்களாக பணி நிறைவு சான்றிதழ் கோரி விண்ணப்பித்தால், அதிகாரிகள் ஆய்வு செய்து சான்றிழிக்க தாமதம் ஏற்படுகிறது. இதனால், கட்டி முடிக்கப்பட்ட வீடுகளை ஒப்படைக்க முடியாத நிலை ஏற்படுவதாக, கட்டுமானத்துறையினர் புலம்புகின்றனர்.
இதுகுறித்து, கட்டுமான துறையினர் கூறியதாவது:
பொதுவாக புதிய கட்டட அனுமதி பெறும்போதுதான், அதில் பல்வேறு கேள்விகள் எழுப்பப்படும். இதை பயன்படுத்தி, சில அதிகாரிகள் வசூல் பார்க்கின்றனர்.
ஆனால், சில மாதங்களுக்கு முன் பணி நிறைவு சான்று வழங்கும் பணிகள் அதிகமாக முடங்கிய நிலையில், சிறப்பு குழுக்கள் அமைத்து நிலுவை விண்ணப்பங்கள் முடிக்கப்பட்டன.
அதன்பின், இப்பணிகள் ஆன்லைன் முறைக்கு மாற்றப்பட்டது. இதனால், விரைவாக பணி நிறைவு சான்றிதழ் கிடைக்கும் என்று எதிர்பார்த்தோம். ஆனால், பணி நிறைவு சான்று கிடைக்க ஒரு மாதத்திற்கு மேல் ஆகிறது. இதனால், பணம் செலுத்தியவர்கள், வீடு பெறுவதிலும் தாமதம் ஏற்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
இதுகுறித்து, சி.எம்.டி.ஏ., அதிகாரி ஒருவர் கூறுகையில், 'ஆன்லைன் முறையில் வில்லங்க சான்று வழங்குவதில் ஏற்படும் தாமதத்தை தவிர்க்க, தொழில்நுட்ப ரீதியாக நடவடிக்கை எடுத்து வருகிறோம். விரைவில் பிரச்னை தீரும்' என்றார்.
***

