/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
இளநீர் மவுசு அதிகரிப்பால் தேங்காய் உற்பத்தி பாதிப்பு
/
இளநீர் மவுசு அதிகரிப்பால் தேங்காய் உற்பத்தி பாதிப்பு
இளநீர் மவுசு அதிகரிப்பால் தேங்காய் உற்பத்தி பாதிப்பு
இளநீர் மவுசு அதிகரிப்பால் தேங்காய் உற்பத்தி பாதிப்பு
ADDED : செப் 21, 2024 12:14 AM

கோயம்பேடு, கோயம்பேடு காய்கறி சந்தைக்கு, பொள்ளாச்சி, பேராவூரணி, உடுமலைப்பேட்டை மற்றும் கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து, தேங்காய் வரத்து உள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக தேங்காய் விலை குறைந்து காணப்பட்டது.
அதேநேரம், சுட்டெரிக்கும் வெயிலால் இளநீர் ஒன்று 40 -- 50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டதால், விவசாயிகளும் இளநீர் விற்பனையில் அதிக கவனம் செலுத்தினர். இதன் காரணமாக, தேங்காய் உற்பத்தி பாதிக்கப்பட்டது; சந்தைக்கு வரத்தும் குறைந்துள்ளது.
முன்னதாக 20 -- 25 லாரி தேங்காய் வந்த இடத்தில், தற்போது, 15 லாரி தேங்காய் மட்டுமே வருகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன் மொத்த விற்பனையில், கிலோ 28 ரூபாய்க்கு விற்பனையான தேங்காய், தற்போது, 20 ரூபாய் உயர்ந்து 48 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
இதையடுத்து, 20 ரூபாய்க்கு விற்பனையான ஒரு தேங்காய் 40 ரூபாய்க்கும், 40 ரூபாய்க்கு விற்பனையான தேங்காய் 60 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், 'இந்த விலையேற்றம் ஒரு மாத்திற்கு நீடிக்க வாய்ப்புள்ளது. அந்தமானில் இருந்து தேங்காய் கொண்டு வந்தால், விலை குறைய வாய்ப்புள்ளது' என்றனர்.
தக்காளி ரூ.20 உயர்வு
தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், ஈரோடு, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும், கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் இருந்தும் தக்காளி வரத்து உள்ளது.
கடந்த வாரம் கோயம்பேடு சந்தையில் முதல் தர தக்காளி கிலோ 30 ரூபாய்க்கும், இரண்டாம் தரம் 25 ரூபாய்க்கும் விற்கப்பட்டது. இந்த நிலையில், ஆந்திராவில் புரட்டி எடுத்த மழையால், விளைச்சல் பாதிக்கப்பட்டு உள்ளது.
வழக்கமாக, கோயம்பேடு சந்தைக்கு 80க்கும் மேற்பட்ட லாரிகளில் வரத்து இருந்த நிலையில், தற்போது 50 லாரியாக குறைந்துள்ளது. இதனால், தக்காளி தட்டுப்பாடு ஏற்பட்டு விலை திடீரென உயர்ந்துள்ளது.
ஒரு கிலோ முதல் தர தக்காளி 50 ரூபாய்க்கும், இரண்டாம் தர தக்காளி 40 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.