/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தேங்காய் விளைச்சல் சரிவு கிலோ ரூ.80க்கு விற்பனை
/
தேங்காய் விளைச்சல் சரிவு கிலோ ரூ.80க்கு விற்பனை
ADDED : ஜன 29, 2025 12:21 AM

சென்னை,தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில், தென்னை சாகுபடிநடந்து வருகிறது. தற்போது, தேங்காய் உற்பத்தி குறைந்துள்ளது. இதனால், அதன் விலை வேகமாக உயர்ந்து வருகிறது.
சென்னை கோயம்பேடு சந்தையில், ஒரு வாரத்திற்கு முன், ஒரு கிலோ தேங்காய் 60 ரூபாய்க்கு விற்கப்பட்டது. நேற்று முன்தினம், 70 ரூபாய்; நேற்று 80 ரூபாய்க்கும் விற்கப்பட்டது. இரண்டு நாட்களில், தேங்காய் கிலோவுக்கு, 20 ரூபாய் உயர்ந்துள்ளது.
இதுகுறித்து, கிழக்கு கடற்கரை தென்னை விவசாயிகள் சங்க தலைவர் இ.வி.காந்தி கூறியதாவது:
ஒவ்வொரு தென்னை மரத்தில் இருந்தும், இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை தேங்காய் அறுவடை செய்யப்படும். இப்போது, தேங்காய் இல்லாமல் பல மரங்கள் நிற்கின்றன.
கருந்தலை பூச்சிகள், ரூக்கோஸ் வெள்ளை ஈக்கள், காண்டாமிருக வண்டுகள் தாக்குதல், வாடல் நோய் உள்ளிட்ட காரணங்களால், தென்னையில் உற்பத்தி குறைந்துள்ளது.
பூச்சிகள் கட்டுப்படுத்த, தோட்டக்கலைத்துறை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. முந்தைய காலங்களில், இதுபோன்று நோய் மற்றும் பூச்சி தாக்குதல் ஏற்படும்போது, அவற்றை கட்டுப்படுத்த, அரசு வாயிலாக உதவிகள் வழங்கப்பட்டன.
இம்முறை நடவடிக்கை எடுக்காததே, மகசூல் குறைய முக்கிய காரணம். ஒரு கிலோ தேங்காய் 100 ரூபாய் வரை விலை உயரும். இதனால், அரசு மீதுதான் மக்களுக்கு அதிருப்தி ஏற்படும்.
இனியாவது தேங்காய் உற்பத்தி அதிகரிக்க தேவையான உதவிகளை, தோட்டக்கலைத் துறை வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

