sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

பேருந்தில் கல்லுாரி - பள்ளி மாணவர் மோதல்...தொடர்கிறது! அடிதடி சண்டையில் பஸ் ஏறி ஒருவர் கால் முறிவு

/

பேருந்தில் கல்லுாரி - பள்ளி மாணவர் மோதல்...தொடர்கிறது! அடிதடி சண்டையில் பஸ் ஏறி ஒருவர் கால் முறிவு

பேருந்தில் கல்லுாரி - பள்ளி மாணவர் மோதல்...தொடர்கிறது! அடிதடி சண்டையில் பஸ் ஏறி ஒருவர் கால் முறிவு

பேருந்தில் கல்லுாரி - பள்ளி மாணவர் மோதல்...தொடர்கிறது! அடிதடி சண்டையில் பஸ் ஏறி ஒருவர் கால் முறிவு

3


ADDED : அக் 20, 2024 12:16 AM

Google News

ADDED : அக் 20, 2024 12:16 AM

3


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓட்டேரி, மாநகர பேருந்தினுள் பள்ளி மாணவர் மற்றும் வாலிபர் சரமாரியாக தாக்கிக் கொண்டனர். தொடர்ந்து, கீழே இறங்கி ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டபோது, அவ்வழியே வந்த தனியார் பேருந்தில் சிக்கி, பள்ளி மாணவரின் கால் முறிந்தது.

சென்னையில் உள்ள பல்வேறு கல்லுாரிகளில், 'ரூட் தல' என்ற பிரச்னை பல ஆண்டுகளாக நீடித்து வருகிறது.

ஒவ்வொரு பகுதிக்கும் தங்களை தலைவராக அடையாளம் காட்டிக் கொள்ள விரும்பும் மாணவர்கள், தங்கள் அணியில் மற்ற மாணவர்களை சேர்த்துக் கொண்டு வலம் வருவதும், எதிர் கோஷ்டியினர் மீது தாக்குதல் நடத்துவதும் தொடர்கிறது.

அதுபோன்ற ஒரு தாக்குதலில், திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி, பொன்பாடியைச் சேர்ந்த சுந்தர், 19, என்ற கல்லுாரி மாணவர் பலத்த காயமடைந்தார். ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், கடந்த 10ம் தேதி சிகிச்சை பலனின்றி இறந்தார்.

அதேபோல், இரு வாரத்திற்கு முன், பிராட்வேயில் இருந்து குன்றத்துார் வரை செல்லும் தடம் எண்: '188கே' மாநகர பேருந்தில், செல்லம்மாள் கல்லுாரி அருகே 30க்கும் மேற்பட்ட நந்தனம் கல்லுாரி மாணவர்கள் ஏறி, அட்டகாசம் செய்தனர். இதனால், பயணியர் பீதியடைந்தனர்; பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனரும் அதிருப்தியடைந்தனர்.

இதுபோன்று, அரசு பேருந்தில் ஆடல், பாடல்களால் தொந்தரவு செய்வது, பேருந்தினுள் அடிதடி செய்வது போன்ற மாணவர்களின் அட்டூழியங்களை தடுக்க வேண்டும் என குரல் வலுத்து வருகிறது.

இந்நிலையில் நேற்று, ஓட்டேரி மாநகர பேருந்தில் நடந்த அடிதடி சம்பவத்தால், பள்ளி மாணவரின் கால் முறிந்த சம்பவம், அதிருப்தி அலையை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.

ஓட்டேரியைச் சேர்ந்த 17 வயது கல்லுாரி மாணவர், கோயம்பேடில் இருந்து திரு.வி.க., நகர் செல்லும் தடம் எண்: 46 மாநகர பேருந்தில், அண்ணா நகரில் ஏறி, நேற்று மதியம், வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார்.

அதே பேருந்தில், அந்த வாலிபரின் தோழி உட்கார்ந்திருந்த இருக்கையை ஒட்டி பிளஸ் 1 பயிலும், 16 வயது மாணவர் நின்றுள்ளார். பேருந்தில் ஓரளவுக்கே கூட்டம் இருந்துள்ளது.

எனினும் பள்ளி மாணவர், அந்த தோழியை உரசியபடி பயணிப்பதாக, கல்லுாரி மாணவர் அதிருப்தியடைந்துள்ளார்.

இரு மாணவர்களுக்கும் ஒருவருக்கு ஒருவர் தெரியும். எந்த நிறுத்தத்தில் ஏறி, இறங்குவார்கள் என்பதும் அத்துப்படி.

கோபத்தில் இருந்த கல்லுாரி மாணவர், பள்ளி மாணவரை அழைத்து, தள்ளி நிற்கும்படி கூறியுள்ளார். ஆனால், பள்ளி மாணவர் அதை கண்டுகொள்ளவில்லை. அங்கிருந்து நகராமல் தொடர்ந்து பயணித்தார்.

பேருந்து ஓட்டேரி வந்த நிலையில், இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. பின், வாக்குவாதம் முற்றி, பேருந்தினுள் ஒருவரை ஒருவர், மாறி மாறி தாக்கிக்கொண்டனர். அதற்குள் பேருந்து, ஐ.சி.எப்., நிறுத்தம் வந்தது. பிரச்னையை தவிர்க்க கருதிய கல்லுாரி மாணவர், அந்நிறுத்தத்தில் இறங்கிக் கொண்டார். பள்ளி மாணவர், அதே பேருந்தில் தொடர்ந்து பயணித்தார்.

பின், 20 நிமிடங்கள் கழித்து, அங்கிருந்து வேறொரு பேருந்தில் ஏறிய கல்லுாரி மாணவர், கொன்னுார் பொடிக்கடை நிறுத்தத்தில் இறங்கினார்.

கல்லுாரி மாணவர் அந்த நிறுத்தத்திற்கு தான் வருவார் என்பதை கணித்த பள்ளி மாணவர், தன் நண்பர்கள் ஐந்து பேரை, மொபைல் போனில் அழைத்து பேசி, அங்கு தயாராக இருக்கும் படி கூறியுள்ளார்.

முன்னதாக வந்து இறங்கிய கல்லுாரி மாணவரை, பள்ளி மாணவர்கள் ஒன்று சேர்ந்து, சுற்றி வளைத்து வம்பிழுத்து அடிக்க துவங்கினர். பதிலுக்கு கல்லுாரி மாணவரும், பள்ளி மாணவர்களை தாக்கினார்.

இந்த கைகலப்பில், பேருந்தில் பிரச்னை செய்த பள்ளி மாணவரை, கல்லுாரி மாணவர் எட்டி உதைத்தார். அப்போது, தடுமாறி சாலையில் விழுந்த பள்ளி மாணவர், அவ்வழியே வந்த தனியார் பேருந்து பின் சக்கரத்தில் சிக்கினார். இதில், அந்த மாணவரின் வலது காலில் முறிவு ஏற்பட்டது.

இதையடுத்து, அங்கிருந்தோர் சண்டையை விலக்கி, கால் முறிந்த பள்ளி மாணவரை, ஆம்புலன்ஸ் வரவழைத்து ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த மோதலில் கல்லுாரி மாணவருக்கும் இடது கண் புருவத்தில் அடிபட்டு, ரத்தம் கொட்டி முகம் வீங்கியது. அவரும் ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு, கண் புருவத்தில் இரண்டு தையல் போடப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக, ஓட்டேரி போலீசார் விசாரித்து வருகின்றனர். சென்னையில் ரூட் தல பிரச்னையில் பேருந்து, ரயில் போன்றவற்றில் கல்லுாரி மாணவர்கள் ரகளை செய்து வரும் நிலையில், தற்போது பள்ளி மாணவர்களும் மோதலை துவக்கி உள்ளனர்.






      Dinamalar
      Follow us