ADDED : செப் 02, 2025 02:07 AM
சென்னை:பெரும்பாக்கம் அரசு கலைக்கல்லுாரியில், ஒன்பது இளநிலை மற்றும் நான்கு முதுநிலை பாடப்பிரிவுகளில், 1,200 பேர் படிக்கின்றனர்.
மாணவர்கள் ஒழுக்கம், நலன், எதிர்கால திட்டம் குறித்து பேச, கல்லுாரி மேலாண்மை குழு அமைக்க வேண்டும் என, இரண்டு மாதத்திற்கு முன் அரசு உத்தரவிட்டது.
இதன்படி, இக்கல்லுாரியின் முதல் கூட்டம், நேற்று நடந்தது. இதில், மூன்று தொழில் நிறுவனங்களை சேர்ந்தவர்கள், கல்லுாரி முதல்வர், மூத்த பேராசிரியர், கல்லுாரி வேலை வாய்ப்பு அலுவலர், மாவட்ட வேலை வாய்ப்பு அதிகாரி, மாணவர் மற்றும் பெற்றோரில் தலா ஒரு நபர் கொண்ட மேலாண்மை குழுவினர் கூடினர்.
இதில், மாணவர்கள் குறிப்பிட்ட நேரத்தில் கல்லுாரிக்கு வருவது, போக்குவரத்து வசதி, போதை பழக்கமிருக்கும் மாணவர்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கை, உரிய மனநல ஆலோசனை, மதிப்பெண்ணுடன் கூடிய பயிற்சி வழங்கும் நிறுவனங்களை தேர்வு செய்வது குறித்து விவாதிக்கப்பட்டது.
அடுத்த கூட்டத்தில், நடைமுறைக்கு கொண்டு வர வேண்டிய திட்டங்கள் குறித்து தீர்மானிக்க முடிவு செய்யப்பட்டது.