/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வரிசை கட்டும் கல்லுாரி வாகனங்கள் ராமாபுரம் பாரதி சாலையில் நெரிசல்
/
வரிசை கட்டும் கல்லுாரி வாகனங்கள் ராமாபுரம் பாரதி சாலையில் நெரிசல்
வரிசை கட்டும் கல்லுாரி வாகனங்கள் ராமாபுரம் பாரதி சாலையில் நெரிசல்
வரிசை கட்டும் கல்லுாரி வாகனங்கள் ராமாபுரம் பாரதி சாலையில் நெரிசல்
ADDED : ஜூன் 04, 2025 12:10 AM

ராமாபுரம், வளசரவாக்கம் மண்டலம், ராமாபுரத்தில், நெசப்பாக்கம் - சின்ன போரூர் பகுதிகளை இணைக்கும் பிரதான சாலையாக, பாரதி சாலை உள்ளது.
நெடுஞ்சாலை துறை பராமரிப்பில் இருந்த இச்சாலை, தற்போது மாநகராட்சி பராமரிப்பில் உள்ளது.
இச்சாலையில், ராமாபுரம் காவல் நிலையம், தனியார் கல்லுாரி ஆகியவை அமைந்துள்ளதால், எந்நேரமும் போக்குவரத்து அதிக அளவில் இருக்கும்.
ஆற்காடு சாலை மற்றும் மவுன்ட் - பூந்தமல்லி நெடுஞ்சாலையில் மெட்ரோ ரயில் பணிகள் நடப்பதால், நெசப்பாக்கம், போரூர், வளசரவாக்கம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல, வாகன ஓட்டிகள் பாரதி சாலையை அதிகம் பயன்படுத்துகின்றனர்.
இதனால், சமீப காலமாக இச்சாலையில் வாகன போக்குவரத்து அதிகரித்துள்ளது. அத்துடன், மாலை நேரங்களில், ஒரே நேரத்தில் கல்லுாரியில் இருந்து பல பேருந்துகள் வெளியே வந்து, சாலையில் வரிசை கட்டி நிற்பதால், போக்குவரத்து ஸ்தம்பிக்கிறது.
பாரதி சாலை, நாயுடு சாலை, கம்பர் சாலை, வெங்கடேஷ்வரா நகர் சாலை ஆகிய சந்திப்புகளில், காலை மற்றும் மாலை நேரங்களில், வழிவிடாமல் வாகனங்கள் ஒன்றோடு ஒன்று முட்டி மோதி நிற்பதால், அப்பகுதியை கடக்க, அரை மணி நேரத்திற்கும் மேல் ஆகிறது.
மேலும், இச்சாலையில் உள்ள நடைபாதை சிதிலமடைந்துள்ளதுடன், ஆக்கிரமிப்புகளால் சுருங்கியுள்ளதால், பாதசாரிகள் சாலையில் நடந்து செல்லும் நிலை உள்ளது.
நெரிசல் ஏற்படும் போது, பள்ளி மாணவர்கள், முதியவர்கள் சாலையை கடக்கவும், நடந்து செல்லவும் சிரமப்படுகின்றனர்.
எனவே, போக்குவரத்து நெரிசலை சீர் செய்ய, இச்சாலை சந்திப்புகளில் போக்குவரத்து போலீசார் பணியில் ஈடுபட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.