/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வேளச்சேரி - பரங்கிமலை மேம்பால ரயில் சேவை துவக்கம்! 17 ஆண்டு தவிப்பு தீர்ந்ததால் பயணியர் உற்சாகம்
/
வேளச்சேரி - பரங்கிமலை மேம்பால ரயில் சேவை துவக்கம்! 17 ஆண்டு தவிப்பு தீர்ந்ததால் பயணியர் உற்சாகம்
வேளச்சேரி - பரங்கிமலை மேம்பால ரயில் சேவை துவக்கம்! 17 ஆண்டு தவிப்பு தீர்ந்ததால் பயணியர் உற்சாகம்
வேளச்சேரி - பரங்கிமலை மேம்பால ரயில் சேவை துவக்கம்! 17 ஆண்டு தவிப்பு தீர்ந்ததால் பயணியர் உற்சாகம்
UPDATED : மார் 15, 2026 10:52 AM
ADDED : மார் 15, 2026 05:29 AM

சென்னை: சென்னை புறநகரின் முக்கிய இணைப்பு ரயில் சேவையான, வேளச்சேரி - பரங்கிமலை மேம்பால தடத்தில், நேற்று முதல் ரயில் சேவை துவங்கியது. இத்தடத்தில் இயக்கப்பட்ட மின்சார ரயில்களில் பயணித்த பயணியர், 17 ஆண்டு தவிப்பு தீர்ந்ததாக கூறி மகிழ்ந்தனர்.
சென்னை கடற்கரை - வேளச்சேரி மேம்பால ரயில் தடத்தில், தினமும் 80க்கும் மேற்பட்ட மின்சார ரயில் சேவைகள் இயக்கப்படுகின்றன. இவற்றில், ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயணம் செய்து வருகின்றனர்.
இந்த தடத்தில், முக்கிய இணைப்பாக இருக்கும் வேளச்சேரி - பரங்கிமலை இடையே 5 கி.மீ., துாரத்தை இணைக்கும் வகையில், மேம்பால ரயில் வழித்தட திட்டப்பணி, 2008ல் துவங்கப்பட்டது.
ஆனால், ஆதம்பாக்கம், தில்லை கங்கா நகரில் நிலம் கையகப்படுத்துவதில் ஏற்பட்ட பிரச்னையால், பணிகள் பல ஆண்டுகளாக முடங்கின. இதற்கு தீர்வு காணப்பட்டு, 2021க்கு பின், பணிகள் மீண்டும் துவங்கின. 17 ஆண்டுகளாக நடந்து வந்த ரயில் இணைப்பு பணிகள், கடந்த ஆண்டு நவம்பரில் முடிந்தன.
இதையடுத்து, இத்தடத்தில் நவ., 7 மற்றும் டிச., 15ல் அடுத்தடுத்து சரக்கு ரயில்கள் இயக்கி சோதனை நடத்தப்பட்டது. சில தொழில்நுட்ப கோளாறுகள் சரிசெய்யப்பட்ட பின், இத்தடத்தில் ரயில் இயக்க, ரயில்வே பாதுகாப்பு தலைமை ஆணையர் ஜனக்குமார் கர்க் அனுமதி அளித்தார்.
இதையடுத்து, இத்தடத்தில் பரங்கிமலையில் இருந்து வேளச்சேரி வழியாக கடற்கரைக்கு முதல் மின்சார ரயில் சேவை, நேற்று அதிகாலை 5:00 மணிக்கு துவங்கியது. ஒரு மணி நேரம் பயணித்து, கடற்கரையை சென்றடைந்தது.
இந்த ரயிலில் ரயில்வே அதிகாரிகள், ஊழியர்கள், புழுதிவாக்கம், ஆதம்பாக்கம், வேளச்சேரி உட்பட, சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள், பல்வேறு குடியிருப்போர் நலச்சங்கத்தை சேர்ந்தோர், உற்சாகமாக பயணித்தனர்.

மின்சார ரயிலில் பயணம் செய்த, புழுதிவாக்கம் பகுதியைச் சேர்ந்த சிலர் கூறியதாவது:
வேளச்சேரி - பரங்கிமலை மார்க்கத்தில் ரயில் சேவை வரும் என, நீண்ட காலமாக எதிர்பார்த்திருந்தோம். இப்போது நிறைவேறியுள்ளது. மடிப்பாக்கம், கீழ்க்கட்டளை, புழுதிவாக்கம், ஆதம்பாக்கம் உட்பட, சுற்றுவட்டாரப் பகுதியைச் சேர்ந்த மக்களுக்கு, இதுவரை நேரடியாக ரயில் சேவை இல்லை.
தற்போது, வேளச்சேரி - பரங்கிமலை ரயில் தடம் இணைப்பால், மெட்ரோ ரயில், புறநகர் மின்சார ரயிலை எளிதாக அடைய முடியும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அன்பரசன், இந்த ரயிலில் பயணம் செய்தார். அவர் கூறுகையில், ''வேளச்சேரி - பரங்கிமலை மேம்பால ரயில் திட்டம் தாமதமானதற்கு, அ.தி.மு.க., ஆட்சியே காரணம். அவர்கள் முறையாக நிலத்தை கையகப்படுத்தி, ரயில்வே துறையிடம் ஒப்படைக்கவில்லை. முன்பே திறக்க வேண்டிய திட்டம் இது. காலம் தாழ்த்திவிட்டு, தற்போது அவசர கதியில் இந்த ரயில் சேவை துவங்கப்பட்டுள்ளது,'' என்றார்.
பரங்கிமலை - வேளச்சேரி இணைப்பு திட்டம், 17 ஆண்டுகளாக பல்வேறு தடைகளைக் கடந்து பயன்பாட்டிற்கு வந்துள்ளது. 2008ம் ஆண்டில் 495 கோடியாக மதிப்பிடப்பட்டிருந்த இத்திட்டச் செலவு, 734 கோடியாக அதிகரித்துவிட்டது. இந்த இணைப்பு வசதி, பயணியருக்கு பெரிதும் உதவும். கடற்கரை - வேளச்சேரி இணைப்பால், தாம்பரத்தை அணுகும் வசதி எளிதாகியுள்ளது. இதனால், தென்சென்னையில் பல லட்சக்கணக்கான பயணியர் பயனடைவர். - வி.ராமாராவ், 83, தலைவர், நங்கநல்லுார் நலச்சங்கங்களின் கூட்டமைப்பு.
பல ஆண்டுகளாக எதிர்பார்த்த மேம்பால ரயில் சேவை துவக்கப்பட்டது. ஆதம்பாக்கம், மடிப்பாக்கம், புழதிவாக்கம், உள்ளகரம், வாணுவம்பேட்டை, நங்கநல்லுார் பகுதி மக்கள், வேளச்சேரி வரை தினமும் பல கி.மீ., துாரம் இருசக்கர வாகனத்தில் செல்ல வேண்டிய அவசியம், இனி இல்லை. குடும்பத்தின் மாதாந்திர பட்ஜெட்டில் சிறிது சேமிக்க முடியும். ரயில் பயணியரை குறிவைத்து வளரும் நடைபாதை கடைகளுக்கு ஆரம்பத்திலே தடை போட்டால் போக்குவரத்து சிக்கல் இருக்காது. - ஜி.கீதா, 45, செயலர், ஏ.ஜி.எஸ்., காலனி குடியிருப்போர் நலச்சங்கம்.

