/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கொடுங்கையூர் குப்பை கிடங்கில் தீ கண் எரிச்சலால் மக்கள் அவதி
/
கொடுங்கையூர் குப்பை கிடங்கில் தீ கண் எரிச்சலால் மக்கள் அவதி
கொடுங்கையூர் குப்பை கிடங்கில் தீ கண் எரிச்சலால் மக்கள் அவதி
கொடுங்கையூர் குப்பை கிடங்கில் தீ கண் எரிச்சலால் மக்கள் அவதி
ADDED : மார் 15, 2026 05:30 AM

கொடுங்கையூர்: கொடுங்கையூர் குப்பை கிடங்கில் ஏற்பட்ட தீயால் 1 கி.மீ., சுற்று வட்டார மக்கள், கண் எரிச்சலால் பாதிக்கப்பட்டனர்.
கொடுங்கையூர் குப்பைக் கிடங்கு, 352 ஏக்கர் பரப்பு உடையது. 1986 முதல், இங்கு குப்பை கொட்டப்படுகிறது. சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட முதல் எட்டு மண்டலங்களில் இருந்து தினமும் சேகரிக்கப்படும் 2,500 டன் குப்பை, கொடுங்கையூர் குப்பைக் கிடங்கில் கொட்டப்பட்டு வருகிறது.
நேற்று கடும் வெயில் நிலவிய நிலையில், குப்பை கிடங்கில், மதியம் 2:00 மணிக்கு திடீரென தீப்பற்றி, கொழுந்துவிட்டு எரிந்தது. அப்பகுதியில் 1 கி.மீ., சுற்றளவிற்கு புகை மண்டலமானதால் பகுதிமக்களுக்கு கண் எரிச்சல் ஏற்பட்டது.
கொருக்குப்பேட்டை, தண்டையார்பேட்டை தீயணைப்பு நிலையங்களில் இருந்து, 10க்கும் மேற்பட்ட வீரர்கள் வந்து 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
தீ விபத்து குறித்து, வடசென்னை குடியிருப்போர் நலச்சங்கங்களின் கூட்டமைப்பினர் கூறியதாவது:
குப்பை கிடங்கில் ஏற்பட்ட தீயால் எழில் நகர், எம்.ஜி.ஆர்., நகர், சந்திரசேகர் நகர், நேதாஜி நகர், ஆர்.ஆர்., நகர், கிருஷ்ணமூர்த்தி நகரில் வசிப்போர், கண் எரிச்சல், மூச்சு திணறலால் பாதிக்கப்பட்டனர்.
'பயோ மைனிங்' நடக்கும் இடத்தில் குப்பை எரிக்க வேண்டிய அவசியம் இல்லை. இப்பணியை கவனிக்க வேண்டிய அண்ணா பல்கலை பொறியாளர் குழுவின் என்ன செய்கின்றனர் என தெரியவில்லை?
இவ்வாறு அவர்கள் கூறினர்.
30.50 லட்சம் டன் கழிவு அகற்றம் கொடுங்கையூர் குப்பை கொட்டும் வளாகத்தில் பயோ மைனிங் முறையில் நிலத்தை மீட்டெடுக்கும் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. 66.52 லட்சம் டன் குப்பை இதுவரை, 30.50 லட்சம் டன் அகற்றப்பட்டுள்ளது. இந்தாண்டு இறுதிக்குள் முழுமையாக குப்பை அகற்றப்பட்டு அந்நிலம் மீட்கப்படும். - குமரகுருபரன் கமிஷனர், மாநகராட்சி

