/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
58,473 சதுர அடி 'கிளப் ஹவுஸ்' கட்டித்தர ஆணையம் உத்தரவு
/
58,473 சதுர அடி 'கிளப் ஹவுஸ்' கட்டித்தர ஆணையம் உத்தரவு
58,473 சதுர அடி 'கிளப் ஹவுஸ்' கட்டித்தர ஆணையம் உத்தரவு
58,473 சதுர அடி 'கிளப் ஹவுஸ்' கட்டித்தர ஆணையம் உத்தரவு
ADDED : ஜூன் 04, 2025 12:13 AM
சென்னை,திட்ட அனுமதி வரைபடத்தில் உள்ளபடி, 58,473 சதுர அடிக்கு 'கிளப் ஹவுஸ்' வளாகத்தை கட்டித்தர வேண்டும் என ரியல் எஸ்டேட் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை போரூர் காரப்பாக்கம் பகுதியில், எஸ்.பி.ஆர்., மற்றும் ஆர்.ஜி., கட்டுமான நிறுவனம் சார்பில், அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டது.
இதற்காக சி.எம்.டி.ஏ., அனுமதி அளித்த வரைபடம் அடிப்படையில் இங்கு, 58,473 சதுர அடி பரப்பளவில், கிளப் ஹவுஸ் கட்டித்தர திட்டமிடப்பட்டது.
இத்திட்டத்தில் வீடு வாங்குவோருக்கு, இது தொடர்பாக கட்டுமான நிறுவனம் உறுதி அளித்து இருந்தது.
கட்டுமான பணிகள் முடிந்து வீடு ஒப்படைக்கப்படும் நிலையில், வரைபடத்தில் குறிப்பிட்ட பரப்பளவில் கிளப் ஹவுஸ் கட்டப்படவில்லை என, புகார் எழுந்தது.
இது தொடர்பாக, அத்திட்டத்தில் வீடு வாங்கியவர்கள் ரியல் எஸ்டேட் ஆணையத்தில் புகார் செய்தனர். வரைபடத்தில் உள்ளபடி கிளப் ஹவுஸ் கட்டித்தரும்படி, 2022ல் ரியல் எஸ்டேட் ஆணையம் உத்தரவிட்டது.
இந்த உத்தரவை கட்டுமான நிறுவனம் செயல்படுத்தவில்லை என, அங்கு வீடு வாங்கியவர்களில் ஒருவரான, வி.கே.விஜயராகவன், ரியல் எஸ்டேட் ஆணையத்தில் முறையிட்டார்.
இது தொடர்பாக ரியல் எஸ்டேட் ஆணைய தலைவர், ஷிவ்தாஸ் மீனா தலைமையிலான அமர்வு பிறப்பித்த உத்தரவு:
இந்த வழக்கில் வீடு விற்பனையின்போது, 58,473 சதுர அடியில் கிளப் ஹவுஸ் இருக்கும் என உறுதி அளிக்கப்பட்டது. ஆனால், இதில் பாதிக்கும் குறைந்த பரப்பளவில் மட்டுமே கிளப் ஹவுஸ் கட்டித்தரப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.
மேலும், அறிவித்தபடி, 'மெஸ்ஸனைன் புளோர்' எனப்படும் இடைநிலை தள வாகன நிறுத்துமிட வசதியும் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
எனவே, சம்பந்தப்பட்ட கட்டுமான நிறுவனம், ஏற்கனவே உறுதி அளிக்கப்பட்ட, 58,473 சதுர அடியில் கிளப் ஹவுஸ் வளாகத்தை கட்டி கொடுக்க வேண்டும். இடை நிலை தள வாகன நிறுத்தம் உள்ளிட்ட வசதிகளையும் வரைபடத்தில் உள்ளவாறு செய்து கொடுக்க வேண்டும்.
இப்பணிகளை, வரும் ஜூலை, 31க்குள் முடித்து ஒப்படைக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
***