/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பழுதான இயந்திரம் வழங்கிய நிறுவனம் ரூ.ஒரு லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு
/
பழுதான இயந்திரம் வழங்கிய நிறுவனம் ரூ.ஒரு லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு
பழுதான இயந்திரம் வழங்கிய நிறுவனம் ரூ.ஒரு லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு
பழுதான இயந்திரம் வழங்கிய நிறுவனம் ரூ.ஒரு லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு
ADDED : ஆக 06, 2025 12:17 AM
சென்னை,பழுதான இயந்திரம் வழங்கியதால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட நபருக்கு, ஒரு லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கும்படி, கோவையை சேர்ந்த தனியார் நிறுவனத்துக்கு, திருவள்ளூர் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருவேற்காடு தேவிநகரைச் சேர்ந்தவர் உமாபதி சுபேய குப்புசாமி. இவர், திருவள்ளூர் நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் தாக்கல் செய்த மனு:
கடந்தாண்டு, 'ஸ்டீம் அயனிங் மற்றும் போல்டிங் மெஷின்' வாங்க, கோவையைச் சேர்ந்த, 'ஐ டூ' நிறுவனத்திற்கு, 3 லட்சத்து 8,400 ரூபாய் செலுத்தினேன். நான்கு மாதங்கள் கழித்து இயந்திரம் கிடைத்தது. அது வேலை செய்யவில்லை.
புகார் செய்தபோது, தொழில்நுட்ப பணியாளரை அனுப்பி வைத்து, பழுதை சரி செய்து தருவதாக கூறினர். ஆனால், பழுதை சரி செய்து தரவில்லை.
எனவே, இயந்திரத்தை திரும்ப பெற்றுக்கொண்டு, நான் செலுத்திய தொகையை திரும்ப வழங்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனுவை, நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் எஸ்.எம்.லதா மகேஸ்வரி, உறுப்பினர் பி.முருகன் அடங்கிய அமர்வு விசாரித்தது.
மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர்கள் எம்.காமேஷ், எஸ்.தமிழ்வேந்தன் ஆஜராகி, ''பழுதுகுறித்து பல முறை புகார் அளித்தும், உரிய பதிலளிக்கவில்லை. நான்கு மாதங்களுக்கு பின் இயந்திரத்தை வழங்கியதால், மனுதாரரின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளது,'' என்றனர்.
இதையடுத்து, ஆணையம் பிறப்பித்த உத்தரவு:
வழக்கு விசாரணையின்போது நிறுவனம் தரப்பில், எந்த பதிலும் அளிக்கப்படவில்லை. எனவே, 'ஐ டூ' நிறுவனம், மனுதாரருக்கு வழங்கிய இயந்திரத்தை எடுத்துக்கொண்டு, 3 லட்சத்து 8,400 ரூபாயை திரும்ப வழங்க வேண்டும்.
மன உளைச்சலுக்கு இழப்பீடாக ஒரு லட்சம் ரூபாயும், வழக்கு செலவுக்காக, 5,000 ரூபாயும் வழங்க வேண்டும்.
இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
***