/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
செங்கை - கடற்கரை 'ஏசி' மின் ரயில் தாமதமாக இயக்கப்படுவதாக புகார்
/
செங்கை - கடற்கரை 'ஏசி' மின் ரயில் தாமதமாக இயக்கப்படுவதாக புகார்
செங்கை - கடற்கரை 'ஏசி' மின் ரயில் தாமதமாக இயக்கப்படுவதாக புகார்
செங்கை - கடற்கரை 'ஏசி' மின் ரயில் தாமதமாக இயக்கப்படுவதாக புகார்
ADDED : அக் 30, 2025 03:54 AM

சென்னை: செங்கல்பட்டு - கடற்கரை இடையேயான, 'ஏசி' மின்சார ரயில் தினமும் 20 நிமிடங்கள் தாமதமாக இயக்கப்படுவதாக, பயணியர் புகார் தெரிவித்துள்ளனர்.
சென்னை புறநகரில் முதல் முறையாக, 'ஏசி' மின்சார ரயில், கடந்த ஏப்ரல் 19ல் துவங்கியது. பயணியரின் கோரிக்கையை ஏற்று, நேரம் மாற்றியமைக்கப்பட்டு, எட்டு நடைகளாக, 'ஏசி' ரயில் சேவை அதிகரிக்கப்பட்டது.
'ஏசி' மின்சார ரயில் முதல் சேவை, தாம்பரத்தில் இருந்து காலை 6:50 மணிக்கு புறப்பட்டு, காலை 7:35 மணிக்கு செங்கல்பட்டு சென்றடையும். அங்கிருந்து காலை 7:50 மணிக்கு புறப்பட்டு, காலை 9:25 மணிக்கு கடற்கரையை வந்தடையும்.
பின், கடற்கரையில் இருந்து காலை 9:41 மணிக்கு புறப்பட்டு, காலை 10:36 மணிக்கு தாம்பரத்தை வந்தடையும். அங்கிருந்து மதியம் 1:00 மணிக்கு புறப்பட்டு, மதியம் 1:55 மணிக்கு கடற்கரையை வந்தடையும்.
பின், கடற்கரையில் இருந்து பிற்பகல் 2:30 மணிக்கு புறப்பட்டு, மாலை 4:00 மணிக்கு செங்கல்பட்டு செல்லும். அங்கிருந்து மாலை 4:30 மணிக்கு புறப்பட்டு, மாலை 6:00 மணிக்கு கடற்கரை வந்தடையும்.
கடற்கரையில் இருந்து மாலை 6:17 மணிக்கு புறப்பட்டு, இரவு 7:50 மணிக்கு செங்கல்பட்டு சென்றடையும். அங்கிருந்து இரவு 8:10 மணிக்கு புறப்பட்டு, இரவு 8:50 மணிக்கு தாம்பரத்திற்கு சென்றடையும் என, அறிவிக்கப்பட்டது.
மேற்கண்ட கால அட்டவணைப்படி, 'ஏசி' மின்சார ரயில் இயக்கப்படுவதில்லை. தினமும், 15 முதல் 20 நிமிடங்கள் வரை தாமதமாக இயக்கப்படுவதாக, பயணியர் புகார் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து, 'ஏசி' ரயில் பயணியர் கூறியதாவது:
கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில், 'ஏசி' மின்சார ரயில் சேவை வரவேற்கத்தக்கது. இருப்பினும், உரிய கால அட்டவணைப்படி இயக்கப்படாதது ஏமாற்றத்தை அளித்துள்ளது.
செங்கல்பட்டில் இருந்து, தினமும் காலை 7:50 மணிக்கு 'ஏசி' மின் ரயில் புறப்படவேண்டும். ஆனால், பெரும்பாலான நாட்களில், 15 முதல் 20 நிமிடங்கள் வரை தாமதமாகவே புறப்படுகிறது.
'ஏசி' மின்சார ரயிலில் கூடுதல் கட்டணம் கொடுத்து செல்வது, பயண நேரமும் குறையும் என்பதற்காக தான். ஆனால், மின்சார விரைவு ரயில், 'ஏசி' மின்சார விரைவு ரயில் சென்றடையும் நேரத்தில் பெரிதாக வித்தியாசம் இல்லை.
இந்நிலை தொடர்ந்தால், 'ஏசி' மின்சார ரயிலில் பயணியர் எண்ணிக்கை குறையும். எனவே, 'ஏசி' மின்சார ரயிலை தாமதமின்றி இயக்க, நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

