/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பறிமுதல் செய்யப்பட்ட, 19 கோடி மதிப்பிலான பொருட்கள் உரியவர்களிடம் ஒப்படைப்பு
/
பறிமுதல் செய்யப்பட்ட, 19 கோடி மதிப்பிலான பொருட்கள் உரியவர்களிடம் ஒப்படைப்பு
பறிமுதல் செய்யப்பட்ட, 19 கோடி மதிப்பிலான பொருட்கள் உரியவர்களிடம் ஒப்படைப்பு
பறிமுதல் செய்யப்பட்ட, 19 கோடி மதிப்பிலான பொருட்கள் உரியவர்களிடம் ஒப்படைப்பு
ADDED : பிப் 04, 2024 05:34 AM

சென்னை: சென்னையில், 2023ம் ஆண்டில் பல்வேறு வழக்குகளிலிருந்து பறிமுதல் செய்யப்பட்ட, 19.21 கோடி மதிப்பிலான பொருட்களை உரியவரிடம் போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோட் நேற்று வழங்கினார்.
சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு கீழ், 12 காவல் மாவட்டங்கள் உள்ளன.
அவற்றில் கடந்த, 2023ம் ஆண்டில் நடந்த குற்றச் சம்பவங்களில் உரிய நடவடிக்கைகள் மேற்கொண்டு, குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து தங்க நகை, பணம், மொபைல்போன்கள், மடிக்கணிணிகள், பட்டுப்புடவைகள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.
அவற்றை உரியவர்களிடம் வழங்கும் நிகழ்ச்சி எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் நேற்று நடந்தது.
இதில் கலந்து கொண்ட சென்னை போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோட், பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களை அதன் உரிமையாளர்களிடம் வழங்கினார்.
அப்போது, பணம், நகை, உள்ளிட்ட பொருட்களை திரும்ப பெற்றுக் கொண்டவர்கள் சென்னை காவல் துறையினரை கண்ணீர் மல்க வெகுவாக பாராட்டினர்.
நிகழ்ச்சியில் போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோட் கூறியதாவது :
2022ல் இருந்து, 2023 வரை செயின் மற்றும் மொபைல்போன் பறிப்பு, ஆதாயத்திற்காக கொலை, கொள்ளை மற்றும் திருட்டு ஆகியவை குறைந்துள்ளது.
70 ரவுடிகள், 78 போதைப் பொருள் குற்றவாளிகள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் கைது செய்யப்பட்ட, 74 குற்றவாளிகள் உட்பட, 2748 குற்றவாளிகளுக்கு சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டில், வீடு உடைத்து திருடிய, 335 குற்றவாளிகள், இரு சக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட, 450 குற்றவாளிகள் உட்பட, 1,109 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுவரை, 3,582 கிலோ போதைப் பொருட்கள் நீதிமன்ற உத்தரவின்படி அழிக்கப்பட்டுள்ளது.
போதைப் பொருள் குற்றவாளிகளின் வங்கி கணக்குகளை முடக்கும் தீவிர பணியில், 43,37,482 கோடி மதிப்புள்ள, 894 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது.
2023ம் ஆண்டு விபத்துக்கள் மற்றும் இறப்புகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது.
கடந்த, 2023ம் ஆண்டு மொத்தம், 19.21 கோடி மதிப்பிலான, 3,337 சவரன் நகை, 50 கிலோ வெள்ளிப் பொருட்கள், 3,60,73,051 கோடி ரொக்கம், 798 மொபைல்போன்கள், 411 இருசக்கர வாகனங்கள், 28 ஆட்டோக்கள் மற்றும், 15 இலகுரக வாகனங்கள் மீட்கப்பட்டு இன்று அதன் உரியவர்களிடம் ஒப்படைத்துள்ளோம். மத்திய குற்றப்பிரிவு தொடர்பான, 811 வழக்குகளில் சம்பந்தப்பட்ட, 265 கோடி மதிப்பிலான சொத்துக்கள் மீட்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிகழ்ச்சியில், கூடுதல் கமிஷனர்கள் பிரேம் ஆனந்த் சின்ஹா, கபீல் குமார் சரட்கர், அஸ்ரா கார்க், செந்தில்குமாரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
வ.எண் தலைப்பு 2021 2022 2023
1 ஆதாயக்கொலை 10 4 3
2 வழிப்பறி 357 361 276
3 திருட்டு 27 31 17
4 சங்கிலி பறிப்பு 46 42 17
5 மொபைல்போன் பறிப்பு 393 475 371
குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களின் விபரம்
2021 : 464
2022 : 496
2023 : 714
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றம்
எண் தலைப்பு 2022 2023
1 கற்பழிப்பு 36 21
2 வரதட்சனை இறப்பு 2 -
3 கணவர் மற்றும் உறவினர்கள் கொடுமை 106 86
4 கடத்தல் மற்றும் பெண்கள் கடத்தல் 7 4
மொத்தம் 2022ல் : 151 2023ல் 111
போக்சோ வழக்குகள்
பதிவான வழக்குகள் 2022 : 352
பதிவான வழக்குகள் 2023 : 310
போதை பொருள் தடுப்பு நடவடிக்கை
வ.எண் வகை 2021 2022 2023
1 கஞ்சா 1,460 1,107 2,659
2 கொக்கைன் கிராம் 45 21 -
3 மெத்தம்பெட்டமைன் 4 5.7 11.4
4 கஞ்சா சாக்லேட்டுகள் - 0.004 104.8