/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
எம்.ஆர்.எப்., ஆலை திறந்தும் குழப்பம்
/
எம்.ஆர்.எப்., ஆலை திறந்தும் குழப்பம்
ADDED : அக் 03, 2025 12:32 AM
திருவொற்றியூர், தொழிலாளர் போராட்டம் முடிவுக்கு வந்து, திருவொற்றியூர் எம்.ஆர்.எப்., தொழிற்சாலை மீண்டும் திறக்கப்பட்டுள்ள நிலையில், விதிகளை மீறி நிரந்தர பணியிடத்தில் பயிற்சி தொழிலாளர்களை சேர்த்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை திருவொற்றியூர் - விம்கோ நகரில், எம்.ஆர்.எப்., டயர் உற்பத்தி தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. மருத்துவ காப்பீட்டு முன்பணம் கோரியும், பயிற்சி தொழிலாளர்கள் நிரந்தரம் கோரியும், 20 நாட்களாக போராடி வந்தனர்.
இதனால், ஆலை நிர்வாகம் கதவடைப்பு செய்தது. தொழிலாளர் நலத்துறை ஆணையர் நடத்திய சமரச பேச்சில் உடன்பாடு ஏற்பட்டு, நேற்று முன்தினம் ஆலை மீண்டும் செயல்பாட்டுக்கு வந்தது.
இந்நிலையில், சமரச பேச்சில் நடந்த உடன்பாட்டை மீறி, நிரந்தர பணியிடங்களில், என்.ஏ.பி.எஸ்., என்ற மத்திய அரசின் பயிற்சி திட்ட தொழிலாளர்களை நிர்வாகம் சத்தமின்றி சேர்த்துள்ளது. இந்த விபரம் அறிந்த தொழிலாளர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
இதுகுறித்து, எம்.ஆர்.எப்., தொழிற்சங்க வெளி உப தலைவர் சிவபிரகாசம் கூறியதாவது:
அரசின் அறிவுரை, நிபந்தனைகளை மீறிய நிர்வாகம், உற்பத்தி பிரிவுகளில், நிரந்தர தன்மை கொண்ட பணியில், என்.ஏ.பி.எஸ்., பயிற்சி திட்ட ஊழியர்களை பணியில் சேர்த்துள்ளது. இதை தொழிற்சங்கம் ஆரம்பம் முதலே எதிர்த்து வருகிறது. நிர்வாகத்தின் விதிமீறலால் தொழிலாளர்கள் மீண்டும் போராடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.