/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மூன்றுமுனை சந்திப்பில் நெரிசல் நெசப்பாக்கத்தில் தொடரும் அவதி
/
மூன்றுமுனை சந்திப்பில் நெரிசல் நெசப்பாக்கத்தில் தொடரும் அவதி
மூன்றுமுனை சந்திப்பில் நெரிசல் நெசப்பாக்கத்தில் தொடரும் அவதி
மூன்றுமுனை சந்திப்பில் நெரிசல் நெசப்பாக்கத்தில் தொடரும் அவதி
ADDED : பிப் 15, 2024 12:39 AM

நெசப்பாக்கம், நெசப்பாக்கம், மூன்று முனை சந்திப்பில் ஏற்படும் நெரிசலைத் தவிர்க்க, போக்குவரத்து போலீசார் பணியில் ஈடுபட வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
சென்னை, கோடம்பாக்கம் மண்டலம், எம்.ஜி.ஆர்., நகரில் அண்ணா பிரதான சாலை உள்ளது. இது, கே.கே., நகர், அசோக் நகர், விருகம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளை இணைக்கும் முக்கிய பேருந்து சாலையாக உள்ளது.
இருவழிப் பாதையாக உள்ள இச்சாலை, 1.3 கி.மீ., நீளம் மற்றும் இருபுறம், தலா 35 அடி அகலம் உடையது. இச்சாலையில் அடிக்கடி ஏற்பட்ட பள்ளம் காரணமாக, நெசப்பாக்கம் அருகே 200 மீட்டர் துாரத்திற்கு சாலை மூடப்பட்டுள்ளது.
எனவே, இருவழியாக வரும் வாகனங்கள் இந்த பகுதியில் ஒரே சாலையில் செல்ல வேண்டி உள்ளது. இதனால், நெரிசல் ஏற்படுகிறது.
அத்துடன், இதன் அருகே நெசப்பாக்கம் லிங்க் சாலை, அண்ணா பிரதான சாலை மற்றும் கே.கே., நகரில் இருந்து வரும் முனுசாமி சாலை ஆகியவை சந்திக்கும் மூன்று முனை சந்திப்பு உள்ளது.
இந்த சந்திப்பில், 'சிக்னல்' வசதியில்லை. இங்கு போக்குவரத்து போலீசாரும் பணியில் இருப்பதில்லை. இதனால் காலை, மாலை மற்றும் இரவு நேரங்களில், மூன்று சாலைகளில் இருந்தும் வாகனங்கள் முட்டிக்கொண்டு நிற்பதால், இந்த சந்திப்பு ஸ்தம்பித்து விடுகிறது.
யார் வழிவிடுவது என்பதில் வாகன ஓட்டிகள் இடையே நடக்கும் போட்டியால், அரை மணி நேரத்திற்கு மேல் வாகனங்கள் நகராமல் நிற்கும் நிலை உள்ளது.
இதனால், ஆம்புலன்ஸ் மற்றும் அவசரமாக செல்லும் பயணியர் பாதிக்கப்படுகின்றனர். இதனால், இந்த பகுதியில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன.
எனவே, இந்த சந்திப்பில் நிலவும் போக்குவரத்து நெரிசலை முறை செய்ய, போக்குவரத்து போலீசாரை நியமிப்பதுடன், சிக்னல் அமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
இதுகுறித்து நெசப்பாக்கத்தைச் சேர்ந்த சு.செந்தில் குமார், 45, என்பவர் கூறுகையில்,''ராமாபுரத்தில் உள்ள தனியார் கல்லுாரி பேருந்துகள், மாலை நேரத்தில் இச்சாலையில் வரிசை கட்டி ஒன்றின் பின் ஒன்றாக வரும்.
காலை மற்றும் மாலை நேரத்தில், அதிக வாகன போக்குவரத்தும் இருக்கும். இதனால், கடும் நெரிசல் ஏற்படுகிறது. இதை முறைப்படுத்த, போக்குவரத்து போலீசாரை நியமிக்க வேண்டும்,'' என்றார்.

