/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
திருவாலங்காடு அருகே ரயிலை கவிழ்க்க.. சதி திட்டம்? சிக்னல் துண்டிப்பால் தப்பியது ஏற்காடு எக்ஸ்பிரஸ்
/
திருவாலங்காடு அருகே ரயிலை கவிழ்க்க.. சதி திட்டம்? சிக்னல் துண்டிப்பால் தப்பியது ஏற்காடு எக்ஸ்பிரஸ்
திருவாலங்காடு அருகே ரயிலை கவிழ்க்க.. சதி திட்டம்? சிக்னல் துண்டிப்பால் தப்பியது ஏற்காடு எக்ஸ்பிரஸ்
திருவாலங்காடு அருகே ரயிலை கவிழ்க்க.. சதி திட்டம்? சிக்னல் துண்டிப்பால் தப்பியது ஏற்காடு எக்ஸ்பிரஸ்
ADDED : ஏப் 25, 2025 11:39 PM

சென்னை :திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காடு அருகே ரயில் தண்டவாளத்தையும், சிக்னலையும் இணைக்கும், 'ரிவர்ஸ் லாக் ராடை' மர்ம நபர்கள் கழற்றியுள்ளனர். இதனால் சிக்னல் துண்டிக்கப்பட்டு, சரியான நேரத்தில் ரயில்வே ஊழியர் ஆய்வு செய்ததால், ஏற்காடு விரைவு ரயிலை கவிழ்க்க நடந்த சதித்திட்டம் முறியடிக்கப்பட்டுள்ளது. இதன் பின்னணி குறித்து, ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.
சென்னை - அரக்கோணம் ரயில் மார்க்கத்தில், திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடில் ரயில் நிலையம் உள்ளது.
இந்த மார்க்கத்தில் கோவை, பெங்களூரு, திருவனந்தபுரம், திருப்பதி உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு, 50க்கும் மேற்பட்ட விரைவு ரயில்களும், அரக்கோணம் - சென்னை சென்ட்ரலுக்கு, 200க்கும் மேற்பட்ட புறநகர் மின்சார ரயில்களும் சென்று திரும்புகின்றன.
இந்நிலையில், ஈரோடில் இருந்து சென்னை நோக்கி புறப்பட்ட ஏற்காடு விரைவு ரயில், காட்பாடியை கடந்து, அரக்கோணத்தை நோக்கி, நேற்று அதிகாலை வந்து கொண்டிருந்தது.
அப்போது, நேற்று அதிகாலை 1:14 மணிக்கு, திருவாலங்காடு - மோசூர் ரயில் நிலையங்கள் இடையே, அரிசந்திராபுரம் எனும் இடத்தில், பிரதான ரயில் பாதையில் திடீரென சிக்னல் துண்டிக்கப்பட்டது.
இதுகுறித்து கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கிடைத்து, ரயில்வே ஊழியர் செந்தில்குமார் என்பவர், சிக்னல் துண்டிக்கப்பட்ட இடத்திற்கு 1:40 மணிக்கு சென்றார்.
அங்கு ஆய்வு செய்யும்போது, 'ஸ்விட் ரயில் பிராக்கெட்'டில் இருந்து, மூன்று நட்டு மற்றும் எம்.எஸ்., பின் எனும் போல்ட் இல்லாததால், 'ரிவர்ஸ் லாக் ராடு' கழன்று, சிக்னல் துண்டிக்கப்பட்டது தெரியவந்தது. , அங்குள்ள லுாப் லைனில், வந்தே பாரத் ரயில், 33 நாட்களுக்கும் மேலாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.
ரயில் தண்டவாளத்தையும், சிக்னலையும் 'ரிவர்ஸ் லாக் ராடு' தான் இணைக்கிறது. இதை மர்ம கும்பல் கழற்றி எடுத்து சென்றது தெரிந்தது.
உடனடியாக, திருவாலங்காடு ரயில் நிலைய அதிகாரிக்கு, ரயில்வே ஊழியர் செந்தில் குமார் தகவல் தெரிவித்தார்.
இதையடுத்து, அந்த பிரதான பாதை தவிர்க்கப்பட்டு, மின்சார ரயில்கள் செல்லும் பாதையில், அனைத்து விரைவு ரயில்களும் மாற்றி விடப்பட்டன. இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
ரயில்வே பொறியியல் வல்லுனர்கள், ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு வந்து சரிசெய்யும் பணியை மேற்கொண்டனர்.
இதற்கிடையே, ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் தலைமையில், மோப்ப நாய் ஜான்சி வரவழைக்கப்பட்டு சோதனை நடந்தது. தண்டவாளத்தில் நட்டு, போல்ட் கழற்றப்பட்ட இடங்களில், தடயவியல் துறையினர் மற்றும் கைரேகை நிபுணர்கள் தடயங்களை சேகரித்தனர்.
சின்னம்மாபேட்டை போலீசார், திருவாலங்காடு ரயில் நிலைய பகுதியில் உள்ள 'சிசிடிவி' கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.
சென்னை ரயில்வே கோட்ட மேலாளர் விஸ்வநாத் ஈர்யா, ரயில்வே பாதுகாப்பு படை ஐ.ஜி., ஈஸ்வரராவ், ரயில்வே போலீஸ் ஐ.ஜி., பாபு, திருவள்ளூர் எஸ்.பி., சீனிவாச பெருமாள் உள்ளிட்ட அதிகாரிகள், சம்பவ இடத்தில் ஆய்வு செய்தனர்.
ரயில்வே ஊழியர்கள், தண்டவாளம் சீரமைப்பு மற்றும் சிக்னல் இணைப்பு பணியை முடித்து, ஒன்பது மணி நேரம் கழித்து, ரயில்கள் வழக்கம்போல் இயக்கப்பட்டன.
இதுகுறித்து, ரயில்வே போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர். தவிர, மாநில பயங்கரவாத தடுப்புப் பிரிவினரும் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணைக்காக மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளன.
இதுகுறித்து, சென்னை ரயில்வே கோட்ட மேலாளர் விஸ்வநாத் ஈர்யா கூறுகையில், ''மூன்று நட்டு மற்றும் எம்.எஸ்., பின் கழற்றப்பட்டுள்ளது. இது, தற்செயலாக நடந்ததா அல்லது சதியா என்பது விசாரணைக்கு பின் தெரியும். கவரைப்பேட்டை விபத்துக்கும், இதற்கும் தொடர்பு இல்லை. சதி வேலையை செய்தவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.