/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சாலையோரம் பஸ் நிலையம் கட்டுமானம் வாகன நெரிசலில் தவிக்கும் வேளச்சேரி
/
சாலையோரம் பஸ் நிலையம் கட்டுமானம் வாகன நெரிசலில் தவிக்கும் வேளச்சேரி
சாலையோரம் பஸ் நிலையம் கட்டுமானம் வாகன நெரிசலில் தவிக்கும் வேளச்சேரி
சாலையோரம் பஸ் நிலையம் கட்டுமானம் வாகன நெரிசலில் தவிக்கும் வேளச்சேரி
ADDED : ஏப் 17, 2025 11:45 PM
வேளச்சேரி,
வேளச்சேரி பேருந்து நிலையத்தை, இரண்டு நிமிடத்திற்கு ஒரு பேருந்து கடந்து செல்கிறது. ஆனால், இந்த பேருந்து நிலையம், விஜயநகரை ஒட்டி சாலையோரத்தில், 4,800 சதுர அடி பரப்பில், கழிப்பறை, நேர காப்பாளர் அறையுடன் அமைந்திருந்தது.
இதில், இரண்டு வரிசையில் நான்கு பேருந்துகள் நிறுத்த முடியும். தாம்பரம் நோக்கி செல்லும் பேருந்துகள் சாலையோரம் நிறுத்தப்படுகின்றன.
இந்நிலையில், சி.எம்.டி.ஏ., சார்பில், குறுகிய இடத்தில் உள்ள பேருந்து நிலையத்தை இடித்துவிட்டு, 2 கோடி ரூபாயில் மேம்படுத்தப்படுகிறது.
பேருந்துகள் நிறுத்த இடமில்லாததால், 21எல், 1ஜி, 54எல், 29என், டி70, 51, 51பி, வி51 ஆகிய தடம் எண் கொண்ட பேருந்துகள், படிப்படியாக குறைக்கப்பட்டு வருகின்றன.
இதனால், பயணியர் இரண்டு, மூன்று பேருந்துகள் ஏறிச்செல்ல வேண்டி உள்ளதால், மிகவும் சிரமப்படுகின்றனர்.
மேலும், வேளச்சேரியில் பேருந்து நிலையம் கட்ட மாற்று இடம் இருந்தும், சாலையோரத்தில் கட்டுவதால் போக்குவரத்து நெரிசல் மேலும் அதிகரிக்கும் என, பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து, வேளச்சேரி பகுதி நலச்சங்க நிர்வாகிகள் கூறியதாவது:
வேளச்சேரி ரயில் நிலைய தெற்கு பகுதியில், பேருந்து நிலையம் அமைக்க, பத்து ஆண்டுகளுக்கு முன்பே, 6 ஏக்கர் இடம் ஒதுக்கப்பட்டது.
வேளச்சேரி ரயில் நிலையம் வடக்கு பகுதியில், 2 ஏக்கர் இடம் கேட்டு, பல ஆண்டுகளாக, எம்.பி., - எம்.எல்.ஏ., கவுன்சிலர்களிடம் கடிதம் கொடுத்து வருகிறோம்.
அவர்கள் தலையிடாததாலும், சிலர் தனியாருக்கு ஆதரவாக செயல்பட்டதாலும், வடக்கு பகுதியில் உள்ள 2 ஏக்கர் இடத்தை, ரயில்வே நிர்வாகம் உணவு விடுதி நடத்த தனியாருக்கு குத்தகைக்கு விட்டது.
ஆம்னி பேருந்துகள் நிறுத்தப்படும் ஒரு ஏக்கர் அரசு இடத்தில் பேருந்து நிலையம் அமைக்கவும் கூறினோம். அந்த இடத்தையும் பயன்படுத்தவில்லை.
போக்குவரத்து போலீசாரும், சாலையோர பேருந்து நிலையத்தால் வாகன நெரிசல் அதிகரிக்கும் என கூறினர்.
இதெல்லாம் மக்கள் பிரதிநிதிகளுக்கு தெரிந்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, நெடுஞ்சாலை, போக்குவரத்து துறை அமைச்சர்கள் தலையிட வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

