/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மணலியில் கன்டெய்னர் லாரி கவிழ்ந்து விபத்து பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள கண்ணாடிகள் நாசம்
/
மணலியில் கன்டெய்னர் லாரி கவிழ்ந்து விபத்து பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள கண்ணாடிகள் நாசம்
மணலியில் கன்டெய்னர் லாரி கவிழ்ந்து விபத்து பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள கண்ணாடிகள் நாசம்
மணலியில் கன்டெய்னர் லாரி கவிழ்ந்து விபத்து பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள கண்ணாடிகள் நாசம்
ADDED : ஜூலை 12, 2025 12:24 AM

மணலி, :கன்டெய்னர் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், பல லட்சம் ரூபாய் மதிப்பிலான கண்ணாடிகள் உடைந்து சில்லு சில்லாக நொறுங்கியதால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்வதற்காக, செங்கல்பட்டு மாவட்டம் ஸ்ரீ பெரும்பதுாரில் இருந்து சென்னை எண்ணுார் காட்டுப்பள்ளி துறைமுகத்திற்கு, பல லட்ச ரூபாய் மதிப்பிலான பெரிய கண்ணாடிகள் ஏற்றி, நேற்று மதியம் கன்டெய்னர் லாரி புறப்பட்டது.
லாரியை ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த மிதிலேஷ்குமார், 31, என்பவர் ஓட்டினார். கண்ணாடிகள் ஏற்றி செல்வதற்கு வசதியாக, இந்த கன்டெய்னரில் மேல்புறம் அடைப்பு ஏதுமின்றி வெட்டவெளியாக இருக்கும். கண்ணாடிகள் ஏற்றியபிறகு தார்ப்பாய் போட்டு மூடி வைப்பர்.
இந்த நிலையில், மாதவரம் விரைவு சாலையில் இருந்து, பொன்னேரிநெடுஞ்சாலைக்கு திரும்பும் போது, மணலி - வைக்காடு சந்திப்பு அருகே, மைய தடுப்பில் மோதி வலது பக்கமாக லாரி சாய்ந்து விபத்துக்குள்ளானது. இதில், கண்ணாடி சாலையில் விழுந்து சில்லு சில்லாக நொறுங்கி சிதறியது.
இதனால், மணலிபுதுநகர் - எம்.எப்.எல்., சந்திப்பு வழி போக்குவரத்து முற்றிலுமாக முடங்கியது. மேலும், லாரியின் முன்பக்கம், மைய தடுப்பில் இருந்த இரண்டு தெருவிளக்கு கம்பங்களும் சேதமாகின.
மணலி போக்குவரத்து போலீசார், கிரேன் மூலம் கன்டெய்னர் லாரியை அப்புறப்படுத்தி, கண்ணாடிசில்லுகளையும் அகற்றினர்.
இந்த விபத்தில், ஓட்டுநர் மிதிலேஷ்குமார், லேசான காயங்களுடன் உயிர் தப்பினார்.
மாதவரம் விரைவு சாலையிலேயே, கன்டெய்னர் லாரி தாறுமாறாக வந்ததை பின்புறமாக காரில் வந்தவர், வீடியோ எடுத்துக் கொண்டே வந்துள்ளார்.
அந்த சமயத்தில், விபத்து நிகழ்ந்ததும் வீடியோவில் பதிவாகியுள்ளது. தற்போது, இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
ஓட்டுநர் துாக்க கலக்கத்தில் இருந்ததால், விபத்து நிகழ்ந்திருக்கலாம் என, கூறப்படுகிறது.
விபத்து குறித்து, செங்குன்றம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரிக்கின்றனர்.