ADDED : ஜூலை 11, 2025 12:25 AM

ஆவடி, வெளிவட்ட சாலையில் சென்று கொண்டிருந்த கன்டெய்னர் லாரி, திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
ஸ்ரீபெரும்புதுார் பகுதியில் இருந்து எலெக்ட்ரிக்கல் பொருட்களை ஏற்றிக்கொண்டு, கன்டெய்னர் லாரி ஒன்று நேற்று மாலை, வண்டலுார் - மீஞ்சூர் வெளிவட்ட சாலையில், காட்டுப்பள்ளி துறைமுகம் நோக்கி சென்று கொண்டிருந்தது.
மதுரை வாடிப்பட்டியைச் சேர்ந்த ராஜேஷ் குமார், 42, என்பவர், லாரியை ஓட்டிச் சென்றார். திருமுல்லைவாயல் சிட்கோ அருகே லாரி சென்று கொண்டிருந்த போது, லாரியின் ஓட்டுநர் அறையில் இருந்து கரும்புகை வெளியேறி, திடீரென தீப்பற்றி எரிந்தது. லாரியை சாலையோரமாக நிறுத்திவிட்டு, ராஜேஷ் இறங்கி ஓடினார்.
ஆவடி தீயணைப்பு நிலைய வீரர்கள், ஒரு மணி நேரம் போராடி, தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். லாரின் முகப்பு பகுதி முழுதும் தீக்கிரையானது.
இதுகுறித்து, ஆவடி டேங்க் பேக்டரி போலீசார் விசாரிக்கின்றனர். தீவிபத்தால், கன்டெய்னரில் இருந்த எலெக்ட்ரிக்கல் பொருட்கள் சேதமடைந்திருக்கலாம் என போலீசார் கூறினர்.