/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கன்டெய்னர் லாரிகள் ஸ்டிரைக் துவக்கம்
/
கன்டெய்னர் லாரிகள் ஸ்டிரைக் துவக்கம்
ADDED : டிச 11, 2025 05:30 AM

காசிமேடு: புதிதாக அமல்படுத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட ஒன்பது அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, லாரி உரிமையாளர் சங்கங்களின், 'ஸ்டிரைக்' துவங்கியது. அதேநேரம் சில சங்கங்கத்தினர், போலீஸ் பாதுகாப்புடன் கன்டெய்னர் லாரிகளை இயக்கினர்.
மத்திய அரசு, பழைய வாகனங்கள் புதுப்பிப்பு கட்டணத்தை பல மடங்கு உயர்த்தியுள்ளது. அதில், கனரக வாகனங்களுக்கான கட்டணம், 850 ரூபாயில் இருந்து 28,000 ரூபாயாக உயர்த்தப்பட்டு உள்ளது.
இந்த கட்டணத்தை திரும்ப பெற வேண்டும். ஒரு லாரிக்கு ஆண்டிற்கு, 15,000 முதல் 20,000 ரூபாய் போக்குவரத்து போலீசாரால், 'ஆன்லைன்' அபராதம் விதிக்கப்படுவதை நிறுத்த வேண்டும்.
மோட்டார் தொழிலில் உள்ள குறைகளை சரி செய்ய மோட்டார் வாரியம் அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட, ஒன்பது கோரிக்கைகளை, பல்வேறு சங்கங்கள் வலியுறுத்தி வருகின்றன.
இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னை துறைமுகத்தைச் சேர்ந்த, 13 சங்கங்கள் மற்றும் பல்வேறு வகையான கனரக வாகனங்களைச் சார்ந்த 75 சங்கங்கள் ஒன்றிணைந்து, நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. இதனால், நுாற்றுக்கணக்கான கன்டெய்னர் லாரிகள், கனரக வாகனங்கள் முடங்கின.
போலீஸ் பாதுகாப்பு
அதேநேரம், சென்னை காட்டுப்பள்ளி துறைமுக ஒப்பந்ததாரர்கள் கமிட்டியைச் சேர்ந்தோர், வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்கவில்லை. வாகனங்களை இயக்க போலீஸ் பாதுகாப்பு கோரியிருந்தனர்.
அதன்படி, பாதுகாப்பு அளிக்கும் வகையில், சென்னை காசிமேடு துறைமுக ஜீரோ கேட், திருவொற்றியூர் உள்ளிட்ட கன்டெய்னர் உள்ளிட்ட லாரிகள் செல்லும் சாலையில், போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். குறிப்பிட்ட சில சங்கத்தினர் மட்டும் வாகனங்களை இயக்கினர்.

