/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
குடிநீர் வாரியத்தில் 450 புதிய லாரிகளுக்கு ஒப்பந்த ஆணை அடுக்குமாடி, வணிக வளாகங்களில் தடையின்றி குடிநீர் வினியோகம்
/
குடிநீர் வாரியத்தில் 450 புதிய லாரிகளுக்கு ஒப்பந்த ஆணை அடுக்குமாடி, வணிக வளாகங்களில் தடையின்றி குடிநீர் வினியோகம்
குடிநீர் வாரியத்தில் 450 புதிய லாரிகளுக்கு ஒப்பந்த ஆணை அடுக்குமாடி, வணிக வளாகங்களில் தடையின்றி குடிநீர் வினியோகம்
குடிநீர் வாரியத்தில் 450 புதிய லாரிகளுக்கு ஒப்பந்த ஆணை அடுக்குமாடி, வணிக வளாகங்களில் தடையின்றி குடிநீர் வினியோகம்
ADDED : ஜூன் 17, 2025 12:48 AM

சென்னை, சென்னை குடிநீர் வாரியத்தில், 450 புதிய குடிநீர் லாரிகளுக்கு ஒப்பந்த ஆணை வழங்கியதால், ஒரு ஆண்டாக நீடித்த பிரச்னைக்கு தீர்வு கிடைத்துள்ளது. மேலும், 12,000 மற்றும் 18,000 லிட்டர் புதிய லாரிகள் இயக்குவதால், அடுக்குமாடி குடியிருப்பு, வணிக வளாகங்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய முடியும் என, அதிகாரிகள் கூறினர்.
சென்னை குடிநீர் வாரியம் சார்பில், தினமும் 107 கோடி லிட்டர் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இதில், 20 கோடி லிட்டர், 450 லாரிகள் வழியாக, இணைப்பு இல்லாத சாலையோர தொட்டிகள் மற்றும் முன்பதிவு செய்யும் குடியிருப்பு, வணிக நிறுவனங்களுக்கு குடிநீர் வழங்கப்படுகிறது.
இந்த லாரிகள், ஒப்பந்தம் அடிப்படையில் நியமிக்கப்பட்டன. கடந்த 2021 பிப்., மாதம் முதல் 2024 பிப்., மாதம் வரை, மூன்று ஆண்டுகளுக்கு லாரி ஒப்பந்தம் வழங்கப்பட்டது.
இதில், 6,000 லிட்டருக்கு வாடகையாக 403 ரூபாயும், 9,000 லிட்டருக்கு 510 ரூபாயும் வாடகை என, வாரியம் வழங்கியது. ஒப்பந்த காலம் முடிந்ததும், புதிய ஒப்பந்தம் வழங்கப்படவில்லை. மாறாக, 6, 3 மாதம் என, ஒப்பந்தம் நீட்டிப்பு செய்யப்பட்டது.
இதனால், புதிய லாரிகளுக்கு ஒப்பந்தம் வழங்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனால், குடிநீர் வினியோகத்தில் சிக்கல், போக்குவரத்து போலீசாரால் அபராதம் விதித்து முடக்குவது என, பிரச்னை அதிகரித்தது.
ஐந்து ஆண்டுகளுக்குள் பதிவு செய்யப்பட்ட லாரிகளுக்கு அனுமதி வழங்கப்படும் என, வாரியம் அறிவித்ததால், 2024ம் ஆண்டு முதல் பலர் புதிய லாரிகள் வாங்கி, குடிநீர் வினியோகத்திற்கு பயன்படுத்த முடியாமல், மாதக்கணக்கில் நிறுத்தி வைத்திருந்தனர்.
இந்நிலையில், கடந்த 13ம் தேதி, 450 லாரிகளுக்கு, மூன்று ஆண்டுகள் கணக்கிட்டு புதிய ஒப்பந்த ஆணையை, குடிநீர் வாரிய மேலாண்மை இயக்குனர் வினய் வழங்கினார்.
இது குறித்து, சென்னை குடிநீர் வாரிய டேங்கர் லாரி ஒப்பந்ததாரர்கள் சங்க தலைவர் சுந்தரம், செயலர் கேசவராம் கூறியதாவது:
விண்ணப்பத்தின் தரவரிசை அடிப்படையில் ஒப்பந்தம் ஆணை வழங்கியதால், எந்த குளறுபடியும் ஏற்படவில்லை. சென்னையில் அடுக்குமாடி கட்டடங்கள், வணிக நிறுவனங்கள் அதிகரித்துள்ளன.
இந்த கட்டடங்களுக்கு, புதிய ஒப்பந்த ஆணை வாயிலாக, 12,000 மற்றும் 18,000 லிட்டர் லாரிகளில் குடிநீர் வினியோகம் செய்ய முடியும். இதனால், மாதக்கணக்கில் நிறுத்தி வைத்திருந்த புதிய லாரிகளுக்கு விடிவு கிடைத்தது.
மொத்தமுள்ள 450 லாரிகளுக்கு, 280 உரிமையாளர்கள் உள்ளனர். ஒரு லாரி வைத்திருப்போர் அதிகம். இதனால், புதிதாக தொழில் துவங்க பலர் முன்வந்துள்ளனர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
குடிநீர் வாரிய அதிகாரிகள் கூறுகையில், ''ஓராண்டாக நீடித்த லாரி குடிநீர் பிரச்னைக்கு, புதிய ஆணை வழங்கியதன் வாயிலாக விடிவு கிடைத்துள்ளது. இனிமேல் தடையில்லாமலும், காலதாமதம் ஏற்படாமலும் குடிநீர் வழங்க முடியும்,'' என்றனர்.