/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கோவிலில் 'ரீல்ஸ்' வெளியிட்டவருக்கு மீண்டும் அறங்காவலர் பதவியால் சர்ச்சை
/
கோவிலில் 'ரீல்ஸ்' வெளியிட்டவருக்கு மீண்டும் அறங்காவலர் பதவியால் சர்ச்சை
கோவிலில் 'ரீல்ஸ்' வெளியிட்டவருக்கு மீண்டும் அறங்காவலர் பதவியால் சர்ச்சை
கோவிலில் 'ரீல்ஸ்' வெளியிட்டவருக்கு மீண்டும் அறங்காவலர் பதவியால் சர்ச்சை
ADDED : ஜன 30, 2025 12:29 AM
திருவேற்காடு: திருவேற்காடு, சன்னதிதெருவில் பிரசித்தி பெற்ற தேவி கருமாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு, இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை அறங்காவலர்கள் தேர்தல் நடக்கிறது.
கடந்தாண்டு புதிதாக ஐந்து பேர் அறங்காவலர்களாக நியமிக்கப்பட்டனர்.
கடந்த தமிழ் புத்தாண்டு அன்று, கோவில் அறங்காவலர் வளர்மதி மற்றும் கோவில் அறநிலையத்துறை பெண் ஊழியர்கள் 12 பேர், கோவில் வளாகத்துக்குள் ஒன்று சேர்ந்து, தேவி கருமாரி அம்மன் படத்திற்கு கீழ் நாற்காலியில் அமர்ந்து, பக்தர்கள் முன் 'ரீல்ஸ்' பதிவு செய்து, சமூக வலைதளத்தில் வெளியிட்டனர்.
இச்சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கண்டன குரல்கள் வலுத்த நிலையில், அறங்காவலர் குழு கலைக்கப்பட்டது.
வளர்மதி மற்றும் அறநிலையத்துறை ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், கடந்த வாரம் மீண்டும் அதே ஐந்து பேரை, கோவில் அறங்காவலர்களாக ஹிந்து சமய அறநிலையத் துறை அறிவித்தது.
அறங்காவலர் குழு தலைவர் தேர்வு செய்வதற்கான தேர்தல், திருவேற்காடு கோவில் வளாக அலுவலகத்தில் திருவள்ளூர் மாவட்ட உதவி கமிஷனர் சிவஞானம் தலைமையில், நேற்று நடந்தது.
இதில், என்.கே.மூர்த்தி அறங்காவலர் குழு தலைவராக வெற்றி பெற்றார்.
இந்த நிலையில், 'ரீல்ஸ்' வெளியிட்டு சர்ச்சையில் சிக்கிய வளர்மதிக்கு, மீண்டும் அறங்காவலர் பொறுப்பு அளித்ததற்கு, எதிர்ப்பு வலுக்கிறது. ஆன்மிக எண்ணம் கொண்ட ஒருவரை அறங்காவலராக நியமிக்க வேண்டும் என, வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், அறிவிப்பை திரும்ப பெறாவிட்டால் வியாபாரி சங்கங்கள் மற்றும் பல்வேறு அமைப்புகள் இணைந்து, போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளன.