/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மாநகராட்சி அதிகாரிக்கு லஞ்ச வழக்கில் '5 ஆண்டு'
/
மாநகராட்சி அதிகாரிக்கு லஞ்ச வழக்கில் '5 ஆண்டு'
ADDED : நவ 09, 2024 12:36 AM
சென்னை, திருவான்மியூர், திருவள்ளுவர் நகரைச் சேர்ந்தவர் மஞ்சுளா. இவர், அதே பகுதியில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தால் ஒதுக்கப்பட்ட இடத்தில், நான்கு மாடி வீடு கட்டி உள்ளார்.
கடந்த, 2012ல் மஞ்சுளாவின் கணவர் மூர்த்தியை, சென்னை மாநகராட்சி இளநிலை பொறியாளராக பணியாற்றிய விஸ்வநாதன் என்பவர் தொடர்பு கொண்டார்.
அப்போது, அங்கீகாரம் இல்லாமல் கட்டுமானத்தை மேற்கொண்டுள்ளதாகவும், இந்த கட்டுமானத்தை இடிக்காமல் இருக்க ஒவ்வொரு மாடிக்கும் தலா 5,000 ரூபாய் வீதம் மொத்தம் 20,000 ரூபாய் லஞ்சம் கொடுக்க வேண்டும் என்றும் கேட்டுள்ளார்.
இதுகுறித்து, சென்னை லஞ்ச ஒழிப்பு போலீசில், மூர்த்தி புகார் செய்தார். போலீசாரின் அறிவுரைபடி, முதற்கட்டமாக 10,000 ரூபாய் கொடுப்பதாக கூறியுள்ளார்.
பணத்தை கொடுத்தபோது, அதை பெற்ற பொறியாளர் விஸ்வநாதனை, போலீசார் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். பின், விஸ்வநாதன் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.
இந்த வழக்கு விசாரணை, சென்னையில் உள்ள லஞ்ச ஒழிப்பு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்ற நீதிபதி ப்ரியா முன் நடந்தது.
போலீசார் தரப்பில், அரசு சிறப்பு வழக்கறிஞர் உஷாராணி ஆஜரானார்.
வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடமின்றி, அரசு தரப்பால் நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, விஸ்வநாதனுக்கு ஐந்து ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.