/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மாநகராட்சி பணிகள்; மக்கள் புகார் மீது நடவடிக்கை... முடக்கம் 20 அதிகாரிகள் பணியிடம் காலியாக இருப்பதால் சிக்கல்
/
மாநகராட்சி பணிகள்; மக்கள் புகார் மீது நடவடிக்கை... முடக்கம் 20 அதிகாரிகள் பணியிடம் காலியாக இருப்பதால் சிக்கல்
மாநகராட்சி பணிகள்; மக்கள் புகார் மீது நடவடிக்கை... முடக்கம் 20 அதிகாரிகள் பணியிடம் காலியாக இருப்பதால் சிக்கல்
மாநகராட்சி பணிகள்; மக்கள் புகார் மீது நடவடிக்கை... முடக்கம் 20 அதிகாரிகள் பணியிடம் காலியாக இருப்பதால் சிக்கல்
ADDED : ஜூன் 12, 2025 11:49 PM

சென்னை :சென்னை மாநகராட்சி மண்டலங்களில் உள்ள தலைமை அதிகாரியான உதவி கமிஷனர்கள் மற்றும் முக்கிய பொறுப்பு வகிக்கும் செயற்பொறியாளர்கள் என, 20 பணியிடங்கள் காலியாக உள்ளதால், திட்ட பணிகள் மற்றும் பொதுமக்களின் புகார் மீது நடவடிக்கை முடங்கியுள்ளது.
பொறுப்பு அதிகம் என்பதால், மண்டல உதவி கமிஷனர் பதவி உயர்வுக்கு, பல செயற்பொறியாளர்கள் விருப்பம் தெரிவிக்காததும், காலியிடங்களை நிரப்புவதில் இழுபறி ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
சென்னை மாநகராட்சியின் 15 மண்டலங்களிலும் சாலை, வடிகால்வாய், கால்வாய், கட்டடம் உள்ளிட்ட பணிகள், பல ஆயிரம் கோடி ரூபாயில் நடந்து வருகின்றன.
இந்த பணிகளை, உதவி கமிஷனர், செயற்பொறியாளர்கள் தினமும் கண்காணித்து, பணியின் வேகம், தரம் குறித்து மாநகராட்சி கமிஷனரிடம் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.
ஆனால், பெரும்பாலான மண்டலங்களில், உதவி கமிஷனர், செயற்பொறியாளர்கள் பற்றாக்குறை உள்ளதால், பணிகளின் வேகம் குறைந்து, தரம் கேள்விக்குறியாகி உள்ளது.
மணலி, தண்டையார்பேட்டை, அண்ணா நகர், வளசரவாக்கம், மாதவரம், பெருங்குடி, அடையாறு, சோழிங்கநல்லுார் ஆகிய மண்டலங்களில் உதவி கமிஷனர் இல்லை. அங்குள்ள செயற்பொறியாளர்களே, கூடுதல் பொறுப்பில் பணிகளை கவனிக்கின்றனர்.
அதேபோல், மணலி, திருவெற்றியூர், அண்ணாநகர், வளசரவாக்கம், ஆலந்துார், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், திரு.வி.க., நகர், மாதவரம், பெருங்குடி, அடையாறு, சோழிங்கநல்லுார் ஆகிய 12 மண்டலங்களில் தலா ஒரு செயற்பொறியாளர் பணியிடம் காலியாக உள்ளன.
அடையாறு மண்டலத்தில், உதவி கமிஷனர், இரண்டு செயற்பொறியாளர் பணியிடம் காலியாக உள்ளது.
இதன்படி, மொத்தமுள்ள 15 மண்டலங்களில், எட்டு மண்டலங்களில் உதவி கமிஷனர்கள், 12 மண்டலங்களில் செயற்பொறியாளர்கள் இல்லாததால், திட்ட பணிகள், அன்றாட துாய்மை, சுகாதாரம் உள்ளிட்ட பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால், பொதுமக்களுக்கு பெரிதும் சிரமம் ஏற்பட்டு வருகிறது.
இதுகுறித்து, குடியிருப்போர் நலச்சங்கத்தினர் கூறியதாவது:
மண்டலத்தில் தலைமை அதிகாரியாக உதவி கமிஷனர் பதவி உள்ளது. முக்கிய பிரச்னைகளுக்கு அவர் வழியாக தான் தீர்வு கிடைக்கிறது.
மாநகராட்சி கமிஷனரிடம் புகார் அளித்தால், 'உதவி கமிஷனரிடம் பரிந்துரைக்கிறேன். அவர் உங்களுக்கு தீர்வு கிடைக்க நடவடிக்கை எடுப்பார்' என்கிறார்.
மண்டலத்தில் சென்றால், 'நான் பொறுப்பு அதிகாரி தான். நிரந்தர அதிகாரி நியமித்தபின் வந்து பாருங்கள்' என, செயற்பொறியாளர்கள் திருப்பி அனுப்புகின்றனர்.
அதேபோல், சுகாதாரம், துாய்மை பணி, தெருவிளக்கு தொடர்பாக கீழ் அதிகாரிகளிடம் கூறியும் தீர்வு கிடைக்காவிட்டால், மண்டல உதவி கமிஷனரை சந்திக்க முடியவில்லை.
சாலை உள்ளிட்ட திட்ட பணிகள், போதிய கண்காணிப்பு இல்லாததால், அவை ஆமை வேகத்தில் நடக்கின்றன. அதன் தரமும் சந்தேகத்தை எழுப்புகிறது.
முக்கியமாக பருவமழை நெருங்குவதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பதில், உதவி கமிஷனர்களின் பங்கு முக்கியம்.
சென்னையின் மக்கள் தொகையும், கட்டடங்கள், திட்ட பணிகளின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. அதற்கு ஏற்ப, மண்டலங்களில் அதிகாரிகளை நியமிக்க, மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
கோப்புகள் நிலுவை
சென்னை மாநகராட்சியின் காலியாக உள்ள இடங்களுக்கு, மாநகராட்சியே பதவி உயர்வு வழங்கியதால், அதிகாரிகள் பற்றாக்குறை ஏற்படவில்லை. தமிழ்நாடு நகர்புற உள்ளாட்சிகள் சட்டம் அமலாகிய பின், தமிழக அளவில் பதவி உயர்வு வழங்குவதால், சென்னை மாநகராட்சியில் தனியாக பதவி உயர்வு வழங்க முடியவில்லை.
இதனால், முக்கிய அதிகாரிகள் பற்றாக்குறை அதிகரித்து வருகிறது. நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர், இயக்குநர் மேஜையில் பல உள்ளாட்சி பிரிவுகளின் பதவி உயர்வு கோப்புகள் நிலுவையில் உள்ளன. அவற்றின் மீது விரைந்து நடவடிக்கை எடுத்தால்தான், மாநகராட்சியின் பல முக்கிய பணியிடங்களை நிரப்ப முடியும்.
- சென்னை மாநகராட்சி அதிகாரிகள்