/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மழைநீர் வடிகால்வாயில் கழிவுநீர் இணைப்பு தினமும் இரவு இரண்டு மணி நேரம் மின்வெட்டு வளசரவாக்கம் மண்டல கூட்டத்தில் கவுன்சிலர்கள் குற்றச்சாட்டு
/
மழைநீர் வடிகால்வாயில் கழிவுநீர் இணைப்பு தினமும் இரவு இரண்டு மணி நேரம் மின்வெட்டு வளசரவாக்கம் மண்டல கூட்டத்தில் கவுன்சிலர்கள் குற்றச்சாட்டு
மழைநீர் வடிகால்வாயில் கழிவுநீர் இணைப்பு தினமும் இரவு இரண்டு மணி நேரம் மின்வெட்டு வளசரவாக்கம் மண்டல கூட்டத்தில் கவுன்சிலர்கள் குற்றச்சாட்டு
மழைநீர் வடிகால்வாயில் கழிவுநீர் இணைப்பு தினமும் இரவு இரண்டு மணி நேரம் மின்வெட்டு வளசரவாக்கம் மண்டல கூட்டத்தில் கவுன்சிலர்கள் குற்றச்சாட்டு
ADDED : ஏப் 24, 2025 12:25 AM
வளசரவாக்கம், வளசரவாக்கம் மண்டலக்குழு கூட்டம், அதன் தலைவர் ராஜன் தலைமையில், வளசரவாக்கத்தில் நேற்று நடந்தது. மண்டல உதவி கமிஷனர் பொறுப்பு பானுகுமார் உள்ளிட்ட பல்வேறு அதிகாரிகள் பங்கேற்றனர்.
கூட்டத்தில், கவுன்சிலர்கள் பங்கேற்று, நிறைவேற்றப்பட்ட 32 தீர்மானங்கள் குறித்தும் வார்டின் அடிப்படை தேவைகள் குறித்தும் பேசினர்.
கவுன்சிலர்கள் பேசியதாவது:
தி.மு.க., ஸ்டாலின், 144வது வார்டு: மதுரவாயல் பெருமாள் கோவில் தெருவில் மழைநீர் வடிகால்வாய் கட்ட வேண்டும் என, இரு ஆண்டுகளாக பேசி வருகிறேன். ஆனால், இன்னும் பணிகள் துவங்கவில்லை.
அ.தி.மு.க., சத்தியநாதன், 145வது வார்டு: கோயம்பேடு மின் வாரிய அலுவலகத்திற்கு உட்பட்ட நெற்குன்றம் பகுதியில், 70 - 80 மின் கம்பங்கள் பழுதடைந்துள்ளன. பலமுறை புகார் அளித்தும் 10 - 15 மின் கம்பங்கள் மட்டுமே மாற்றப்பட்டு உள்ளன. கோடைக்காலம் என்பதால், மின் வினியோகம் பாதிக்கப்பட்டு, மக்கள் அவதிப்படும் நிலை உள்ளது.
நெற்குன்றம் 145வது வார்டில் குப்பை முறையாக அள்ளுவதில்லை. பல இடங்களில் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.
அ.ம.மு.க., கிரிதரன், 148வது வார்டு: குடிநீர் வாரியம் சார்பில், நெற்குன்றம் 148வது வார்டில், வீடுகளுக்கு கழிவுநீர் மற்றும் குடிநீர் இணைப்புகள் விரைவாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதேபோல், வார்டில் உள்ள மழைநீர் வடிகால்வாயில் சட்டவிரோதமாக கழிவுநீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. பாதாள சாக்கடை திட்டம் நிறைவேற்றப்பட்ட நிலையில், மழைநீர் வடிகால்வாயில் வழங்கப்பட்டுள்ள கழிவுநீர் இணைப்புகளை துண்டிக்க வேண்டும்.
தவிர, 148வது வார்டு கோயம்பேடு மின் அலுவலகத்திற்கு உட்பட்ட பகுதியில் 70 - 80 மின் கம்பங்கள் பழுதடைந்து காணப்படுகின்றன. அவற்றை மாற்றி அமைக்க வேண்டும்.
நெற்குன்றம் சி.டி.என்., நகர் மற்றும் சக்தி நகரில், தினமும் இரவு 10:00 மணி முதல் நள்ளிரவு 12:00 மணி வரை மின் வெட்டு ஏற்படுகிறது. அதை சரிசெய்ய வேண்டும்.
தி.மு.க., பாரதி, 152வது வார்டு: சவுத்ரி நகர் உள்ளிட்ட பல நகர்களில், 10 நாட்களுக்கும் மேலாக குடிநீர் வினியோகம் தடைபட்டுள்ளது. பகுதிமக்கள், குடிநீருக்காக அல்லல்படும் நிலை உள்ளது.
வளசரவாக்கம் எஸ்.வி.எஸ்., நகரில் மீட்கப்பட்ட நீர்ப்பிடிப்பு பகுதியில் இரும்பு கேட் இல்லாததால், சிறுவர்கள் உள்ளே நுழைந்து மீன் பிடிப்பதும், விளையாடுவதுமாக உள்ளனர். அசம்பாவிதங்கள் நடக்கும் முன், அந்த நீர்ப்பிடிப்பு பகுதிக்கு செல்லும் வழியில் கேட் அமைக்க வேண்டும்.
வார்டில் உள்ள மழைநீர் வடிகால்வாய்களில், வணிக நிறுவனங்கள் மற்றும் கடைகள் சார்பில் சட்ட விரோதமாக கழிவுநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. அவற்றை துண்டிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தி.மு.க., ரமணி மாதவன், 147வது வார்டு: மேட்டுகுப்பம் கங்கையம்மன் கோவில் குளத்தை சீர்செய்ய, குறைவான நிதியே ஒதுக்கப்பட்டுள்ளது. அதிக நிதி ஒதுக்கி குளத்தை முறையாக சீர் செய்ய வேண்டும்.
தி.மு.க., ஹேமலதா 150வது வார்டு: வார்டின் பல இடங்களில், துார்வாரும் பணியின்போது, மழைநீர் வடிகால்வாய்கள் உடைக்கப்பட்டு திறந்த நிலையில் உள்ளன. அவற்றை சீர் செய்ய வேண்டும்.
தி.மு.க., சங்கர் கணேஷ், 151வது வார்டு: வளசரவாக்கம், சுப்பிரமணிய சாமி நகர், எஸ்.வி.எஸ்., நகரில் குடிநீர் வினியோகம் முறையாக இல்லை. குடிநீரில், கழிவுநீர் கலந்து வருகிறது. 100 குடும்பங்கள் வசிக்கும், ஆறுமுகம் நகர் உள்ளிட்ட பகுதிகளில், அடிப்படை வசதிகளான, சாலை மற்றும் தெரு மின் விளக்கு அமைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.