/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வார்டுகளை புறக்கணிக்கும் அரசு அதிகாரிகள் மண்டல குழுவில் கவுன்சிலர்கள் ஆவேசம்
/
வார்டுகளை புறக்கணிக்கும் அரசு அதிகாரிகள் மண்டல குழுவில் கவுன்சிலர்கள் ஆவேசம்
வார்டுகளை புறக்கணிக்கும் அரசு அதிகாரிகள் மண்டல குழுவில் கவுன்சிலர்கள் ஆவேசம்
வார்டுகளை புறக்கணிக்கும் அரசு அதிகாரிகள் மண்டல குழுவில் கவுன்சிலர்கள் ஆவேசம்
ADDED : நவ 19, 2024 12:35 AM

சோழிங்கநல்லுார், சோழிங்கநல்லுார் மண்டல குழு கூட்டம், மண்டல அதிகாரி ராஜசேகர் முன்னிலையில், மண்டல குழு தலைவர் மதியழகன் தலைமையில் நேற்று நடந்தது.
இதில், கவுன்சிலர்கள் பேசியதாவது:
ஏகாம்பரம், தி.மு.க., கவுன்சிலர், 195வது வார்டு:
துரைப்பாக்கம், எழில் நகர் பகுதியில், சாலையில் பல நாட்களாக மழைநீர் தேங்கி நிற்பதால் சகதி தேங்கி, பாதசாரிகள் வழுக்கி விழுகின்றனர். கேட்டால், மழைநீரை தள்ளி சாலையை சுத்தப்படுத்த துடைப்பம் இல்லை என, 'உர்பேசர் சுமித்' நிறுவன அதிகாரி கூறுகிறார்.
அம்மா உணவகங்களில், பொருட்கள் வாங்கிய செலவு குறித்து, முறையாக கணக்கு தாக்கல் செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அஷ்வினி கர்ணா, அ.தி. மு.க., கவுன்சிலர், 196வது வார்டு: கண்ணகி நகர் காவல் நிலையம் எதிரே மழைநீர் தேங்குவதால் மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.
மேனகா சங்கர், அ.தி.மு.க., கவுன்சிலர், 197வது வார்டு: பனையூரில் அங்கன்வாடி மையங்கள் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருவதை தடுக்க வேண்டும். ரேஷன் கடைகளில் மழை நீர் ஒழுகுவதால், அரிசி உள்ளிட்ட பொருட்கள் வீணாகின்றன.
லியோ சுந்தரம், பா.ஜ., கவுன்சிலர், 198வது வார்டு:
எங்கள் வார்டில் வேகத்தடை, எல்லை பலகை, கவுன்சிலர் அலுவலகம் கேட்டு, 27 மாதங்களாக ஒவ்வொரு மண்டல கூட்டங்கள், ரிப்பன் மாளிகை கூட்டங்களில் பேசுகிறேன்; நடவடிக்கை தான் இல்லை.
விப்ரோ தெருவில் மழைநீர் வடிகால் கட்டி, அவை சரியில்லை என, மண்ணில் புதைத்ததால், மாநகராட்சிக்கு 50 லட்சம் ரூபாய்க்கு மேல் இழப்பு ஏற்பட்டது. இந்த பணம் யாரிடம் இருந்து வசூலிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
சங்கர், தி.மு.க., கவுன்சிலர், 199வது வார்டு: சோழிங்கநல்லுார் அணுகு சாலை மிகவும் சேதம் அடைந்துள்ளதால், வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர்.
முருகேசன், தி.மு.க., கவுன்சிலர், 200வது வார்டு:
செம்மஞ்சேரியில், 24 மணி நேரம் செயல்படும் ஆரம்ப சுகாதார நிலையத்தில், இரவு நேர மருத்துவர்கள் இல்லாததால், நோயாளிகளை அலைய விடுகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கு, அந்தந்த அதிகாரிகள் பதில் கூறினர். சில கேள்விக்கு, அதிகாரிகள் முறையாக பதில் கூறாததால், கவுன்சிலர்கள் அதிருப்தி அடைந்தனர்.
தொடர்ந்து, 198வது வார்டு பா.ஜ., கவுன்சிலர் லியோ சுந்தரம் மற்றும் 197வது வார்டு அ.தி.மு.க., கவுன்சிலர் மேனகா சங்கர் ஆகியோர் கூறியதாவது: நாங்கள் மாற்றுக் கட்சி என்பதால் எங்கள் வார்டுகள், அதிகாரிகளால் தொடர்ந்து புறக்கணிக்கப்படுகின்றன; அவசர பணிகளை கூட செய்து தருவதில்லை. பல மாதம், பல ஆண்டுகளாக இழுத்தடிக்கின்றனர். ஓட்டு போட்ட மக்கள் எங்களிடம் கேள்வி கேட்கின்றனர்.
இவை தொடர்ந்தால், இந்த ஆட்சிக்கு தான் கெட்ட பெயர் ஏற்படும்.
மக்கள் பிரதிநிதிகள், அதிகாரிகள் செயல்பாடுகளை, மக்கள் தொடர்ந்து கவனித்து கொண்டு இருக்கின்றனர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதற்கு, மண்டல குழு தலைவர் மற்றும் மண்டல அதிகாரி ஆகியோர், 'நாங்கள் அனைத்து வார்டுகளையும் சமமாக தான் பார்க்கிறோம்.
ஏதாவது, நிர்வாக பிரச்னையால் சில குறைபாடுகள் ஏற்பட்டிருக்கலாம். எங்கள் கவனத்துக்கு கொண்டு வாருங்கள். அவை உடனே சரி செய்து தரப்படும்' என்றனர்.
இதைத் தொடர்ந்து, பக்கவாட்டு வடிகால், சாலை, பூங்கா பராமரிப்பு என, 92 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.