/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கோர்ட்டில் தவறான தகவல் அளித்த இன்ஸ்., மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு
/
கோர்ட்டில் தவறான தகவல் அளித்த இன்ஸ்., மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு
கோர்ட்டில் தவறான தகவல் அளித்த இன்ஸ்., மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு
கோர்ட்டில் தவறான தகவல் அளித்த இன்ஸ்., மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு
ADDED : ஆக 03, 2025 12:28 AM
சென்னை,
தற்கொலை வழக்கில், நீதிமன்றத்துக்கு தவறான தகவலை அளித்த தாம்பரம் ரயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் மீது, ஐ.ஜி., நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நெய்வேலியை சேர்ந்த கலா என்பவர் தாக்கல் செய்த மனு:
என் மகன், கடந்த ஏப்., 10ல் தாம்பரத்தில் தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து, தாம்பரம் ரயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் வழக்குப்பதிவு செய்தார்.
காதல் என்ற பெயரில், என் மகனை பல வழிகளில் பெண் ஒருவர் கொடுமை செய்ததால், அவன் தற்கொலை செய்துள்ளார். காதலித்த பெண்ணுக்கு, 'வாட்ஸாப்' வாயிலாக, குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார்.
ஆனால், தற்கொலை செய்யும்போது கடிதம் எழுதி வைக்காததால், மொபைல் போன் ஆதாரங்களை எடுத்துக் கொள்ள முடியாது என, போலீசார் கூறினர். எனவே, மின்னணு வடிவலான ஆதாரங்களை திரட்டி, போலீசார் வழக்கை விசாரிக்க உத்தரவிட வேண்டும் என, வழக்கு தொடர்ந்தேன்.
இந்த மனு மீதான விசாரணையின் போது, வழக்கை விசாரித்து வருவதாகவும், விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் எனவும், போலீஸ் இன்ஸ்பெக்டர் தரப்பில், ஜூன் 12ல் கூறப்பட்டது. இதை பதிவு செய்த உயர் நீதிமன்றம், என் மனுவை முடித்து வைத்தது.
ஆனால், அதே ஜூன் 12ல், என் மகன் தற்கொலை வழக்கிற்கு முகாந்திரம் இல்லை எனக் கூறி, வழக்கை முடித்து வைத்து, தாம்பரம் நீதிமன்றத்தில் போலீசார் அறிக்கை தாக்கல் செய்துள்ளனர்.
அதில், இந்த நீதிமன்றத்துக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் தவறான தகவலை தந்துள்ளார். எனவே, அவர் தாக்கல் செய்த அறிக்கையை ரத்து செய்து, வழக்கை மீண்டும் விசாரிக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு, நீதிபதி பி.வேல்முருகன் முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில், வழக்கறிஞர் எம்.விஜயகுமார் ஆஜராகி, “நீதிமன்றத்தில் தவறான தகவலை வழங்கி ஏமாற்றிய இன்ஸ்பெக்டர் மீது, தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என்றார்.
இதையடுத்து, நீதிபதி பிறப்பித்த உத்தரவு:
குற்றப்பத்திரிகை விரைவில் தாக்கல் செய்யப்படும் என கூறிய அதே நாளில், வழக்கையே முடித்து வைத்து, அதுகுறித்த அறிக்கையை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்ஸ்பெக்டர் தாக்கல் செய்தது ஏற்க முடியாது. எனவே, வழக்கை முடித்து வைத்து, அவர் தாக்கல் செய்த அறிக்கை ரத்து செய்யப்படுகிறது.
நீதிமன்றத்துக்கு தவறான தகவல் அளித்த தாம்பரம் ரயில் நிலைய இன்ஸ்பெக்டர் மீது, சட்டப்படி நடவடிக்கை எடுக்க, ரயில்வே போலீஸ் ஐ.ஜி.,க்கு உத்தரவிடப்படுகிறது. மனுதாரர் மகன் தற்கொலை வழக்கை, வேறு ஒரு இன்ஸ்பெக்டரை நியமித்து விசாரித்து, மூன்று மாதத்துக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.