/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மைதானத்தில் நாய் கருத்தடை மையம் மாநகராட்சி பதிலளிக்க கோர்ட் உத்தரவு
/
மைதானத்தில் நாய் கருத்தடை மையம் மாநகராட்சி பதிலளிக்க கோர்ட் உத்தரவு
மைதானத்தில் நாய் கருத்தடை மையம் மாநகராட்சி பதிலளிக்க கோர்ட் உத்தரவு
மைதானத்தில் நாய் கருத்தடை மையம் மாநகராட்சி பதிலளிக்க கோர்ட் உத்தரவு
ADDED : ஆக 29, 2025 12:26 AM
சென்னை : கண்ணப்பர் திடலில், விளையாட்டு மைதானத்துக்காக ஒதுக்கப்பட்ட இடத்தில், நாய் கருத்தடை மையம் அமைக்க இடைக்கால தடை விதிக்க கோரிய மனுவுக்கு, இரண்டு வாரத்தில் மாநகராட்சி பதிலளிக்க வேண்டும் என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை சூளையை சேர்ந்த அன்னை கல்வி மற்றும் சமூக சேவைகள் அறக்கட்டளை நிறுவனர் சிவகுணசேகரன் என்பவர் தாக்கல் செய்த மனு:
பெரியமேடு பகுதியில், நேரு விளையாட்டு அரங்கம் அருகில், கண்ணப்பர் திடல் உள்ளது. இது, 'சால்ட் குவாட்டர்ஸ்' என்றும் அழைக்கப்படுகிறது. இந்த திடல், பல்வேறு ஆண்டுகளாக விளையாட்டு சார்ந்த நடவடிக்கைக்கு பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது.
ஆனால், கடந்த 20 ஆண்டுகளாக, விளையாட்டு மைதானத்துக்கு என ஒதுக்கப்பட்ட இடத்தில், சென்னை மாநகராட்சி வேறு சில நடவடிக்கைகளை அனுமதித்துள்ளது.
விளையாட்டு மைதானம் என ஒதுக்கப்பட்ட இடங்களை, வேறு எந்தவித பணிகளுக்கும் பயன்படுத்தக்கூடாது என, உயர் நீதிமன்றம் பல்வேறு வழக்குகளில் உத்தரவிட்டுள்ளது.
அதை மீறும் மாநகராட்சியின் இந்த நடவடிக்கை சட்டவிரோதமானது. தற்போது, கண்ணப்பர் திடலின் ஒரு பகுதியில், நாய் கருத்தடை மையம் அமைக்க, மாநகராட்சி திட்டமிட்டு உள்ளது. எனவே, குழந்தைகள், மாணவர்களுக்கான விளையாட்டு மைதானத்தை மீட்டு, நாய் கருத்தடை மையம் அமைக்க தடை விதிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனு, தலைமை நீதிபதி ஸ்ரீவஸ்தவா, நீதிபதி சுந்தர் மோகன் அடங்கிய அமர்வு முன், விசாரணைக்கு வந்தது.
அப்போது, மாநகராட்சி தரப்பில், 'உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், தெரு நாய்களுக்கு கருத்தடை செய்யும் மையம் அமைக்கப்படுகிறது. விளையாட்டு மைதானம் முழுமையாக மாற்றப்படவில்லை. அதன் ஒரு பகுதியான 6,000 சதுர அடியில் மட்டுமே நாய் கருத்தடை மையம் அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது' என, தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, இந்த மனுவுக்கு இரண்டு வாரங்களில் பதிலளிக்க, சென்னை மாநகராட்சிக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை தள்ளி வைத்தனர்.

