/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ரயில்வே நிர்வாகத்தால் பயணத்தில் குளறுபடி ரூ.25,000 இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு
/
ரயில்வே நிர்வாகத்தால் பயணத்தில் குளறுபடி ரூ.25,000 இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு
ரயில்வே நிர்வாகத்தால் பயணத்தில் குளறுபடி ரூ.25,000 இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு
ரயில்வே நிர்வாகத்தால் பயணத்தில் குளறுபடி ரூ.25,000 இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு
ADDED : ஆக 04, 2025 02:33 AM
சென்னை:'ரயில்வே நிர்வாகத்தின் குளறுபடியால், முன்பதிவு செய்த டிக்கெட் கடைசி நேரத்தில் காத்திருப்போர் பட்டியலுக்கு மாறியதால், பாதிக்கப்பட்ட பயணிக்கு டிக்கெட் கட்டணம் மற்றும் இழப்பீடாக 25,000 ரூபாய் வழங்க வேண்டும்' என, சென்னை நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
சென்னை, பெருமாள் முதலி தெருவைச் சேர்ந்த திலிப்குமார் என்பவர், சென்னை வடக்கு மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு:
ஜோலார்பேட்டையில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு, 2024, ஜூன் 23ல் பயணம் செய்ய, என் குடும்பத்தினர் ஒன்பது பேருக்கு விரைவு ரயிலில் முன்பதிவு செய்தேன். அனைவருக்கும், 'வெயிட்டிங் லிஸ்ட்' எனும் காத்திருப்போர் பட்டியல் டிக்கெட் வழங்கப்பட்டது.
அந்த ரயில், 23ம் தேதி மாலை 4:20 மணிக்கு, ஜோலார்பேட்டையில் இருந்து புறப்பட வேண்டும்.
அன்றைய தினம் காலை 7:00 மணிக்கு, முன்பதிவு டிக்கெட்டில் நான்கு டிக்கெட்டுகள் உறுதி செய்யப்பட்டு விட்டதாகவும், மீதமுள்ள ஐந்து டிக்கெட்டுகள் காத்திருப்போர் பட்டியலில் இருப்பதாகவும், ரயில்வே நிர்வாகம் வாயிலாக மொபைல் போன் எண்ணிற்கு, குறுஞ்செய்தி அனுப்பப்பட்டது.
காலை 10:54 மணிக்கு மற்றொரு குறுஞ்செய்தி வந்தது. அதில், அனைத்து டிக்கெட்டுகளும் காத்திருப்போர் பட்டியலில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
இதன் காரணமாக, எங்கள் பயணத்தில் குழப்பம் ஏற்பட்டது. ரயில் புறப்படுவதற்கு முன் டிக்கெட்டை ரத்து செய்து, உரிய கட்டணத்தை பெற முடியாமல் போனது. ரயில்வே நிர்வாகத்தின் குளறுபடியால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானோம்.
சென்னைக்கு, டாக்ஸியில் 8,022 ரூபாய் செலுத்தி வர வேண்டிய நிலை உருவானது. எனவே, ரயில் பயண கட்டணத்துடன் உரிய இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு, நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் டி.கோபிநாத், உறுப்பினர்கள் கவிதா கண்ணன், வி.ராமமூர்த்தி ஆகியோர் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, ரயில்வே நிர்வாகம் தரப்பில், பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதில், '120 பேர் பயணிக்கும் வகையிலான ரயில் பெட்டி, சில காரணங்களால் 104 பேர் பயணிக்கும் பெட்டியாக மாற்றப்பட்டது.
'இதன் காரணமாக முன்பதிவு டிக்கெட்டுகளில் மாற்றங்கள் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்த மாற்றம் தொடர்பாக முன்கூட்டியே, சம்பந்தப்பட்ட பயணிக்கு குறுஞ்செய்தி மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதில், எந்த குளறுபடியும் நடக்கவில்லை' என குறிப்பிட்டிருந்தது.
மனுவை விசாரித்த ஆணையம் பிறப்பித்த உத்தரவு:
ரயில்வே நிர்வாகத்தின் குளறுபடியான குறுஞ்செய்தி காரணமாக, மனுதாரரின் ரயில் பயணம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, ரயில் டிக்கெட் கட்டணம் 4,005 ரூபாயை திரும்ப வழங்க வேண்டும்.
சேவை குறைபாடு, மன உளைச்சலுக்காக 20,000, வழக்கு செலவுக்காக 5,000 ரூபாயை, ரயில்வே நிர்வாகம் வழங்க வேண்டும்.
இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.