/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சிறுமி வாக்குமூல வீடியோ வெளியான விவகாரம் சிறப்பு புலனாய்வு குழு விசாரிக்க ஐகோர்ட் உத்தரவு
/
சிறுமி வாக்குமூல வீடியோ வெளியான விவகாரம் சிறப்பு புலனாய்வு குழு விசாரிக்க ஐகோர்ட் உத்தரவு
சிறுமி வாக்குமூல வீடியோ வெளியான விவகாரம் சிறப்பு புலனாய்வு குழு விசாரிக்க ஐகோர்ட் உத்தரவு
சிறுமி வாக்குமூல வீடியோ வெளியான விவகாரம் சிறப்பு புலனாய்வு குழு விசாரிக்க ஐகோர்ட் உத்தரவு
ADDED : ஜன 22, 2025 12:47 AM
சென்னை,
அண்ணாநகரில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சிறுமியின் வாக்குமூல வீடியோ வெளியானது தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்குகள் குறித்தும், சிறப்பு புலனாய்வு குழு விசாரிக்க வேண்டும் என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை அண்ணா நகரைச் சேர்ந்த 10 வயது சிறுமியை, பக்கத்து வீட்டில் வசிக்கும் வாலிபர், பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. சிறுமியின் பெற்றோர், வாலிபருக்கு எதிராக, அண்ணாநகர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்க சென்றனர்.
அப்போது, தங்களை இன்ஸ்பெக்டர் தாக்கியதாகவும், வாலிபரின் பெயரை புகாரில் இருந்து நீக்க வற்புறுத்தியதாகவும், சிறுமியின் பெற்றோர் பேசியதாக வீடியோ வெளியானது. ஊடகங்கள், நாளிதழ்களில் செய்தி வெளியானது.
இது தொடர்பாக, சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து, வழக்கை விசாரணைக்கு எடுத்தது. பின், வழக்கின் விசாரணையை சி.பி.ஐ.,க்கு மாற்றி உத்தரவிட்டது.
இதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில், தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது.
வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்ததோடு, சிறப்பு புலனாய்வு குழு அமைத்தது. சென்னை உயர் நீதிமன்ற விசாரணை அறிக்கையை, வாரம்தோறும் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கு, உயர்நீதிமன்றத்தில், நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், சி.குமரப்பன் அடங்கிய அமர்வு முன், நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் இ.ராஜ்திலக் ஆஜராகி, ''பெண் இன்ஸ்பெக்டர் ராஜி, அ.தி.மு.க., முன்னாள் நிர்வாகி சுதாகர், குற்றஞ்சாட்டப்பட்ட சதீஷ் ஆகியோர்மீது, வரைவு குற்றப்பத்திரிக்கை தயாராக உள்ளது,'' எனக்கூறி, அதை தாக்கல் செய்தார்.
மேலும், ''இன்ஸ்பெக்டர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய அரசின் அனுமதி கிடைத்ததும், மூன்று பேர் மீதும் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும்,'' என்றார்.
பாதிக்கப்பட்ட சிறுமி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஆர்.சம்பத்குமார், ''பாதிக்கப்பட்ட சிறுமி அளித்த வாக்குமூலம் அடங்கிய வீடியோ வெளியானது குறித்து, இதுவரை எவ்வித விசாரணையும் நடக்கவில்லை. சிறுமிக்கு இழப்பீடும் முழுமையாக வழங்கப்படவில்லை,'' என்றார்.
இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதற்கான அனுமதியை விரைந்து பெற வேண்டும்.
சிறுமியின் வாக்குமூல வீடியோ வெளியானது தொடர்பாக பதிவான இரண்டு வழக்குகள் குறித்தும், சிறப்பு புலனாய்வு குழு விசாரிக்க வேண்டும். இழப்பீடு தொடர்பாக, சிறுமியின் தாயார் மனு தாக்கல் செய்யலாம் என்று உத்தரவிட்டு, விசாரணையை நான்கு வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.
இந்த வழக்கில் பெண் இன்ஸ்பெக்டர் ராஜி, அ.தி.மு.க., முன்னாள் நிர்வாகி சுதாகர் ஆகியோர் ஜாமின் கேட்டு, போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். மனுவை விசாரித்த நீதிபதி இருவருக்கும் ஜாமின் வழங்கி உத்தரவிட்டார்.