/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கஷ்டப்படும் பெற்றோரை சுட்டிக்காட்டி கோர்ட்... வேதனை! ரகளை, அடிதடி மாணவர்கள் மீது கடும் அதிருப்தி
/
கஷ்டப்படும் பெற்றோரை சுட்டிக்காட்டி கோர்ட்... வேதனை! ரகளை, அடிதடி மாணவர்கள் மீது கடும் அதிருப்தி
கஷ்டப்படும் பெற்றோரை சுட்டிக்காட்டி கோர்ட்... வேதனை! ரகளை, அடிதடி மாணவர்கள் மீது கடும் அதிருப்தி
கஷ்டப்படும் பெற்றோரை சுட்டிக்காட்டி கோர்ட்... வேதனை! ரகளை, அடிதடி மாணவர்கள் மீது கடும் அதிருப்தி
ADDED : நவ 22, 2024 11:03 PM

சென்ன :'குற்றச் சம்பவங்களில் ஈடுபட்ட மாணவர்களின் பெற்றோர், வீட்டு வேலை செய்து, அவர்களை படிக்க அனுப்புகின்றனர். அப்படி இருந்தும், அவர்கள் கல்லுாரிக்குக்கூட செல்லாமல், அடிதடியில் ஈடுபடுவது வேதனை அளிக்கிறது' என, சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், பொன்பாடி பகுதியைச் சேர்ந்த ஆனந்தன் என்பவரின் மகன் சுந்தர். சென்னை மாநில கல்லுாரியில், பி.ஏ., அரசியல் முதலாம் ஆண்டு படித்து வந்த இவர், கடந்த மாதம் 4ல், சென்ட்ரல் ரயில் நிலையத்தில், பச்சையப்பன் கல்லுாரி மாணவர்களால் சரமாரியாக தாக்கப்பட்டார்.
ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சுந்தர், கடந்த மாதம் 9ல் உயிரிழந்தார்.
வழக்கு நிலுவை
இந்த சம்பவத்தில், பச்சையப்பன் கல்லுாரி மாணவர்கள் ஏழு பேரை கைது செய்த பெரியமேடு போலீசார், கொலை வழக்கு பதிவு செய்தனர்.
இவர்களில், ஈஸ்வரன், ஈஸ்வர், யுவராஜ் மற்றும் சந்துரு ஆகியோர், ஜாமின் கேட்டு, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனு, நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா, நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, எஸ்.எப்.ஐ., எனும் இந்திய மாணவர் சங்கம், சட்டப் பஞ்சாயத்து இயக்கம் சார்பில், மாணவர்களுக்கு இடையேயான ஒற்றுமை வழங்குவது குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை வழங்கினர்.
அப்போது, காவல் துறை தரப்பில் கூடுதல் அரசு வழக்கறிஞர் அருள் செல்வம் ஆஜராகி, ''மாணவர்கள் மோதல் சம்பவங்கள் தொடர்பாக, பல்வேறு காவல் நிலையங்களில் 22 வழக்குகள் பதியப்பட்டுள்ளன. வழக்கு விசாரணை நிலுவையில் உள்ளன.
''காவல் துறை மற்றும் ரயில் போலீசாரால் பதிவு செய்யப்பட்ட வழக்குகள், அதன் தற்போதைய நிலை பற்றிய முழு விபரங்களை தாக்கல் செய்ய அவகாசம் வழங்க வேண்டும்,'' என்றார்.
உத்தரவு
அப்போது குறுக்கிட்டு நீதிபதி கூறியதாவது:
குற்றச் சம்பவங்களில் ஈடுபடும் அதிகப்படியான மாணவர்களின் பெற்றோர், வீட்டு வேலை செய்கின்றனர்.
வீட்டு வேலை செய்து தங்கள் பிள்ளைகளை படிக்க அனுப்புகின்றனர். அப்படி இருந்தும், கல்லுாரிக்குக்கூட செல்லாமல் அடிதடியில் ஈடுபடுவது வேதனை அளிக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்ந்து, இந்த வழக்கில் உயர்கல்வித்துறை செயலரை சேர்க்கவும், மாணவர்களுக்கு இடையேயான மோதல் சம்பவம் தொடர்பாக, காவல் துறை மற்றும் ரயில் போலீசாரால் பதிவு செய்யப்பட்ட வழக்கு களின் விபரங்களை தாக்கல் செய்ய அவகாசம் அளித்தும், அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என உத்தரவிட்டு, விசாரணையை வரும் 26ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.