/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பேத்தியை காப்பாற்ற முயன்ற பெண்ணை முட்டி துாக்கிய பசு
/
பேத்தியை காப்பாற்ற முயன்ற பெண்ணை முட்டி துாக்கிய பசு
பேத்தியை காப்பாற்ற முயன்ற பெண்ணை முட்டி துாக்கிய பசு
பேத்தியை காப்பாற்ற முயன்ற பெண்ணை முட்டி துாக்கிய பசு
UPDATED : மார் 16, 2025 08:04 AM
ADDED : மார் 16, 2025 12:21 AM

கொரட்டூர்: கொளத்துார், ராஜிவ்காந்தி நகரைச் சேர்ந்தவர் ஜெயலட்சுமி, 42. வீட்டு வேலை செய்து வருகிறார். இவர், நேற்று முன்தினம் மாலை, கொரட்டூர், விவேகானந்தா நகர், பாலாஜி தெருவில் பேத்தியுடன் நடந்து சென்றார்.
அப்போது, அங்கு நின்றிருந்த பசு, ஜெயலட்சுமியுடன் சென்ற இரண்டரை வயது பேத்தியை முட்ட முயன்றது. அவர் சுதாரித்து, பேத்தியை காப்பாற்றினார்.
ஆனால், விடாமல் பின்சென்ற பசு மாடு, ஜெயலட்சுமியை ஆக்ரோஷமாக வயிற்று பகுதியில் முட்டி துாக்கி வீசியது.
இதில், நிலைகுலைந்து விழுந்த ஜெயலட்சுமியை, பசுமாடு விடாமல் முட்டியது. அவரது அலறல் சத்தம் கேட்டு, அக்கம் பக்கத்தினர் பசு மாட்டை அடித்து விரட்டி, ஜெயலட்சுமியை மீட்டனர். பின், அவரை பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இது தொடர்பான 'சிசிடிவி' கேமரா காட்சி பதிவு, சமூக வலைதளங்களில் வெளியாகி, பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.
தகவலறிந்து வந்த மாநகராட்சி சுகாதாரத்துறை ஊழியர்கள், நேற்று காலை அந்த பசு மாட்டை பிடித்து கோசாலைக்கு அனுப்பினர்.
மேலும், சாலையில் பசு மாட்டை உலவ விட்ட மாட்டின் உரிமையாளர் சோமசுந்தரம், 76, என்பவர் மீது, மாநகராட்சி சார்பில் கொரட்டூர் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
அந்த பசு மாடு, சில தினங்களுக்கு முன் கன்று ஈன்றுள்ளது. 100ல் ஐந்து மாடுகள், கன்று ஈன்றதும் நரம்பு தளர்ச்சி போன்ற பாதிப்புகளால், சிறு ஆக்ரோஷத்துடன் காணப்படும். இது போன்ற சூழலில் தான், ஜெயலட்சுமியை அந்த பசு மாடு முட்டியுள்ளது.
- சுகாதாரத்துறை அதிகாரி.
சென்னை மாநகராட்சி.