UPDATED : செப் 19, 2026 10:16 PM
ADDED : செப் 19, 2026 10:13 PM
சைதாப்பேட்டை: சைதாப்பேட்டை, டோபிகானா பகுதியை சேர்ந்தவர் ஜெயச்சந்திரன், 50. நேற்று முன்தினம் இரவு, கோதமேடு பகுதியில் கடைக்கு சென்ற 10 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். சிறுமி சத்தம் போட்டதும், அக்கம் பக்கத்தினர் ஜெயச்சந்திரனை பிடித்து தர்ம அடி கொடுத்து, போலீசாரிடம் ஒப்படைத்தனர். சைதாப்பேட்டை மகளிர் போலீசார், போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து ஜெயச்சந்திரனை கைது செய்தனர்.
பெண்ணை கத்தியால் தாக்கியவருக்கு 'காப்பு'
அரும்பாக்கம்: சூளைமேடு, சமயபுரத்து அம்மன் கோவில் தெருவில், 33 வயது பெண் நேற்று முன்தினம் இரவு நடந்து சென்றார். அதே பகுதியைச் சேர்ந்த தீனதயாளன், 33, என்பவர், பெண்ணை வழிமறித்து பணம் கேட்டு மிரட்டியுள்ளார். அப்பெண் பணம் இல்லை என கூறியதால் ஆத்திரமடைந்த அவர், கத்தியால் தாக்கி தப்பினார். காயமடைந்த பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். புகாரின் அடிப்படையில் விசாரித்த அரும்பாக்கம் போலீசார், தீனதயாளனை கைது செய்தனர். விசாரணையில், பெண்ணுடன் உல்லாசமாக இருந்த பின், பணம் கேட்டு தாக்கியது தெரியவந்தது.
வீட்டில் மது, போதைப்பொருள் விற்ற மூவர் சிக்கினர்
கண்ணகி நகர்: கண்ணகி நகரை சேர்ந்தவர் மஞ்சுளா, 48. இவர், வீட்டில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து, இரவு நேரங்களில் விற்பனை செய்து வந்தார். நேற்று அவரது வீட்டில் சோதனை நடத்திய கண்ணகி நகர் போலீசார், 40 குவாட்டர் மதுபாட்டில்களை பறிமுதல் செய்து, மஞ்சுளாவை கைது செய்தனர்.
*அதேபகுதியை சேர்ந்த தர்மராஜ், 51, தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை வீட்டில் பதுக்கி வைத்து, பெட்டி கடைகளுக்கு விற்பனை செய்து வந்தார். போலீசார், தர்மராஜை நேற்று கைது செய்து, வீட்டில் இருந்து 30 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.
* இதேபோல், அண்ணா சாலை, அப்பா கிராமணி தெருவைச் சேர்ந்தவர் சுனில் குமார் உபாதியா, 45, என்பவர், வீட்டில் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களை பதுக்கி வைத்து விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. நேற்று வீட்டில் சோதனை நடத்தியதில், ஹான்ஸ் உள்ளிட்ட 139 கிலோ போதைப் பொருட்கள் சிக்கின. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார், போதைப் பொருட்களை பறிமுதல் செய்தனர்.
கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட இருவர் பிடிபட்டனர்
கீழ்ப்பாக்கம்: சென்ட்ரல் ரயில் நிலையத்தில் தனிப்படை போலீசார் நேற்று கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கிடமாக சுற்றித்திரிந்த இருவரை பிடித்து விசாரித்ததில், அவர்களது உடைமைகளில் 45 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. விசாரணையில், மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ரசிக்குல், 19, சுஜாரூதின், 29, என்பதும், கொல்கத்தாவைச் சேர்ந்த அலி, ஒடிசாவில் கஞ்சா வாங்கி சென்னையில் விற்பனை செய்ய அனுப்பியதும் தெரியவந்தது. இருவரையும் கைது செய்த போலீசார், கஞ்சாவை பறிமுதல் செய்து, அலியை தேடி வருகின்றனர்.
ஆட்டோவை திருடி விற்ற வாலிபருக்கு கம்பி
கோயம்பேடு: கோயம்பேடு, சிவன் கோவில் தெருவில் வசித்து வரும் முத்துக்குமரன், 42, லோடு ஆட்டோ ஓட்டி வருகிறார். உடல்நிலை சரியில்லாததால், ஆட்டோவை வீட்டின் அருகே நிறுத்திவிட்டு திண்டிவனம் சென்றார். திரும்பி வந்தபோது ஆட்டோ திருடு போயிருந்தது. போலீசார் விசாரணையில், ஈஞ்சம்பாக்கத்தைச் சேர்ந்த ஜாகீர் உசேன், 26, லோடு ஆட்டோவை திருடி, வேறு இடத்தில் விற்று கிடைத்த பணத்தில் பயணியர் ஆட்டோ வாங்கி சென்னையில் ஓட்டி வந்தது தெரியவந்தது. அவர் மீது ஏற்கனவே இரண்டு குற்ற வழக்குகள் உள்ளன. கைது செய்யப்பட்ட அவர், நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.
கடை ஷட்டரை உடைத்து ரூ.5,000 'அபேஸ்'
முடிச்சூர்: தாம்பரத்தை அடுத்த முடிச்சூர், ஏ.என்., காலனியில் மளிகைக் கடை இயங்கி வருகிறது. இக்கடையை வழக்கம் போல், நேற்று முன்தினம் பூட்டிவிட்டு சென்றனர். நேற்று காலை திறக்க வந்தபோது, ஷட்டர் உடைக்கப்பட்டு 5,000 ரூபாய் ரொக்கத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. உரிமையாளர் புகார்படி, பீர்க்கன்காரணை போலீசார் வழக்குப் பதிவு செய்து, அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளைக் கொண்டு, மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர்.
மெரினாவில் முதியவர் மர்ம மரணம்
மெரினா: மெரினா கலங்கரை விளக்கம் பின்புறம், நேற்று மதியம் முதியவர் ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். தகவலறிந்து சென்ற போலீசார், உடலை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இறந்தவர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் என விசாரித்து வருகின்றனர்.
வீட்டு கதவை உடைத்து 7 சவரன் நகை திருட்டு
பம்மல்: பம்மல், அகத்தீஸ்வரர் கோவில் முதல் தெருவைச் சேர்ந்த ரகுராமன், நேற்று முன்தினம் காலை வீட்டை பூட்டிவிட்டு பணிக்கு சென்றார். மாலை திரும்பியபோது, கதவு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த 7 சவரன் நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. சங்கர் நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.
மாதவரத்தில் போதை பவுடர் விற்ற ஐவர் கைது
மாதவரம்: மாதவரம் பால் பண்ணை அருகே, மாத்துார் பகுதியில் மெத்ஆம்பெட்டமைன் போதைப் பவுடர் விற்பதாக கிடைத்த தகவலையடுத்து, மாதவரம் பால் பண்ணை போலீசார் நேற்று முன்தினம் கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது ஆட்டோ நிறுத்தத்தில் சந்தேகத்திற்கிடமாக இருந்த ஐவரை பிடித்து விசாரித்ததில், போதைப் பவுடர் விற்றது தெரியவந்தது. அவர்களிடமிருந்து 10 கிராம் மெத்ஆம்பெட்டமைன் பறிமுதல் செய்து, கார்த்திக், 29, மணிகண்டன், 33, சபரிகிஷோர், 26, நந்தகுமார், 27, ராஜதுரை, 26, ஆகிய ஐவரை கைது செய்தனர்.
